வன்முறைகள் அற்ற தேர்தல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளது – சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு !

ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

கபே அமைப்பின் “அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம்” எனும் தொனிப்பொருளிலும் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான தெளிவூட்டும் நிகழ்வும் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது.

அதன் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த தேர்தல் நிலவரத்தையும் தற்போது இருக்கின்ற நிலவரத்தினையும் பார்க்கும்போது ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற ஒரு சமாதானமான தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் ஒரு கலாசாரம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.

அதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிடலாம். அதேபோல இந்த பொதுத்தேர்தலிலும் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை.

சட்டவிரோத தேர்தல் பிரசாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகிறது. இதேவேளை பிரசார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கினை வழங்குகிறது. இவற்றை நாம் கண்காணிக்கும்போது அபேட்சகர்களுக்கு எதிரான சேறுபூசக்கூடிய இழிவுபடுத்தக்கூடிய போலிப்பிரசாரங்கள், நாளுக்கு நாள் அதிகரிப்பதனை அவதானிக்க முடிகிறது.

எனவே, அனைத்து அரசியல்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியவர்களை வரவழைத்து அமைதியான தேர்தலுக்காக ஒத்துழைப்போம் என்ற வகையில் சத்தியபிரமானம் ஒன்றை பெறுகின்றோம்.

எனவே சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்கவேண்டும். வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணையவேண்டும் என கபே அமைப்பு கேட்டுக்கொள்கிறது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *