மனிதாபிமானம் இல்லாத வெற்றி வெற்றியல்ல

wanni-visit.jpg
“மனிதாபிமானம் இல்லாத வெற்றியானது வெற்றியாக இருக்க முடியாது’ என்று இலங்கைக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை வருகை தந்து திரும்பி சென்ற பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்டும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் தெரிவித்துள்ளதுடன், இலங்கைக்கு இப்போது சர்வதேச நிவாரண உதவி ஏன் அவசரமாக தேவைப்படுகின்றது என்பதை தாங்கள் நேரடியாகப் பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த இரு அமைச்சர்களும் லண்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு உடனடியாக தமது விஜயம் தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளனர். அதனை அப்பத்திரிகை நேற்று வியாழக்கிழமை பிரசுரித்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

லண்டனிலும் பாரிஸிலும் வேறு பல இடங்களிலும் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பாரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இலங்கைத் தீவின் உள்நாட்டு யுத்தம் 28 வருடங்களாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தாங்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக வடக்கிலுள்ள சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் நீண்ட காலமாக வாதாடி வருகின்றது.

1980 களின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திரமான தமிழ் இராச்சியத்திற்கான போராட்டத்தை ஆரம்பித்தார்கள். 1986 இல் வடக்கிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டை அந்த அமைப்பு தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்நாட்டு யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. இறைமையுள்ள அர சாங்கம் கொலைகார பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கையென திட்டவட்டமாக அறிவித்து இராணுவ பலத்தை பிரயோகித்தது. அரசாங்கத்தினால் சிறுபான்மையினம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

மீண்டும் மீண்டும் எதிர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு அரசியல் தீர்வுகள் ஸ்தம்பிதம் அடைந்தன. போராட்ட இறுதிக் கட்டத்தில் இலங்கை இருப்பதாக அரசாங்கம் இப்போது நம்புகின்றது. அதன் இராணுவ முன்னேற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாததாகும். விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் சுருங்கி வரும் நிலப்பரப்பில், அதாவது ஒரு சில சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் அகப்பட்டுள்ளது. அதன் அளவு ஒருபுறம் இருக்க சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் புலிகளிடம் உள்ளனர். ஏனையோர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சோதனை நிலையங்கள் மற்றும் முகாம்களுக்குள் அவர்கள் உள்ளனர்.

பொதுமக்களின் துன்பங்களும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் இணக்கப்பாட்டிற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் பின்னடைவைக் கண்டதாகவேயுள்ளது.

இலங்கைக்கு நேற்று நாம் (நேற்று முன்தினம்) மேற்கொண்ட விஜயத்திற்கான காரணம் மிக எளிதானதாகும். மோதலினால் இடம்பெயர்ந்த மற்றும் அங்கு சிக்கியிருக்கும் மக்கள் தொடர்பான காலம் கையை விட்டுச் சென்று கொண்டிருக்கின்றது. நாம் அங்கு சென்ற நோக்கமும் மிகச் சாதாரணமானதாகும். ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், ஜி8 என்பன அழைப்பு விடுத்த மனிதாபிமான நிவாரணம் தொடர்பாகவே நாம் அங்கு சென்றோம்.

வவுனியாவில் நிலைமையை நாம் நேரில் பார்த்தோம். இடம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்தோம். அத்துடன், பிரான்ஸின் தளவைத்தியசாலையொன்று அங்கு புதிதாக அமைக்கப்பட்டதையும் கண்டோம். ஒவ்வொரு தனி மனிதரினதும் துன்பகரமான கதைகளை நாம் கேட்டோம். தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பொதுமக்களைச் செல்ல வேண்டாம் என அவர்கள் புலிகளால் வற்புறுத்தப்பட்டிருந்தனர். குண்டுகளாலும் ஆட்லறிகளாலும் அங்கு இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் உள்ளனர். குடும்பங்கள் பிரிந்து விட்டன. தமது அன்புக்குரியவர்கள் குறித்து ஏதாவது செய்திகள் கிடைக்குமா என்று அநேகமானோர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த காலம் தொடர்பான அச்சம், தங்களின் தற்போதைய நிலைமை தொடர்பான பீதி, எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற பயம் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

உடனடித் தேவைகள் குறித்து ஐ.நா.வும் ஐரோப்பிய ஒன்றியமும் உரத்தும் தெளிவாகவும் கூறியுள்ளன. முதலாவதாக இரு தரப்பும் மோதல் சூன்ய வலயம் (அது எதிரானதாக உருவாகியுள்ளது) என்று கூறப்படும் பகுதிகளிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். இலங்கை அரசாங்கத்தை சில காலத்திற்கு யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுத்தோம். புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தும் தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்காகவும் இதற்கான கோரிக்கையை விடுத்தோம். சாத்தியமானளவு விரைவாக மோதல் பகுதியிலிருந்து பொதுமக்கள் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் வெளியேறுவது தொடர்பாகவே சில காலத்துக்கு யுத்த நிறுத்தத்தை அறிவிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தோம்.

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதென்ற இலங்கை அரசின் அறிவிப்பு பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பாக வரவேற்கத்தக்க படிமுறை ஒன்றாகும். இத்தகைய அறிவிப்புகள் கடந்த காலத்திலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது அமுல்படுத்தப்பட வேண்டியதும் பேணப்பட வேண்டியதும் அவசியமானதாகும். மோதல் பகுதிக்கு மனிதாபிமான குழுவை அனுப்புவது தொடர்பான ஐ.நா. அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியிருந்தது. அந்த உடன்பாடு அமுல்ப்படுத்தப்படவில்லை. அது நடைமுறைப்படுத்தப்படுவது அவசியமானதாகும்.

இரண்டாவதாகவுள்ள கவலையானது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் தொடர்பானதும் அவற்றின் நிலைபற்றியதானதாகும். ஐ.நா. நிவாரண நிறுவனங்கள், ஊடகங்கள் என்பன இங்கு செல்வதற்கு முழுமையான அனுமதி வழங்க மறுக்கப்பட்டிருக்கின்றது. இது மிகவும் தவறான நடவடிக்கையாகும். தப்பி வரும் பொதுமக்களை சோதனையிட அரசு விரும்புகின்றது மக்களுடன் விடுதலைப் புலிப் போராளிகள் நுழைந்து விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கம் இதனை செய்ய விரும்புகின்றது. அவ்வாறு வரும் புலிப் போராளிகள் தொடர்ந்தும் பயங்கரவாதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அரசு கருதுகின்றது. ஆனால், இந்த நடவடிக்கையில் வெளிப்ப?டத்தன்மை பேணப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஐ.நா. மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களை சோதனை நடவடிக்கைகளின் சகல கட்டங்களிலும் அரசாங்கம் அனுமதிப்பது அவசியமாகும்.

மோதல் பகுதியிலிருந்து வெளிவரும் பொதுமக்களின் நிலைமைகள் தொடர்பாக அக்கறை செலுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். 2 இலட்சம் இடம்பெயர்ந்தவர்களுடன் நாடு திண்டாடுகின்றது. இவர்களில் பலர் காயமடைந்தவர்களும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் முதியவர்களாகவும் குழந்தைகளாகவும் காணப்படுகின்றனர். கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவி வழங்கும் அமைப்புகள் நேரடியாக பணியில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுத்திருந்தது. ஆனால், ஒழுங்கான முறையில் நிர்ணயிக்கப்படாமலும் போதிய வளங்கள் இல்லாமையும் மனிதாபிமான உதவியை வழங்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பில்லாமல் இருப்பதானது அந்த மக்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்கவே வழி செய்யும்.

ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே நாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டோம். இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் முகாம்களுக்குள் சிறந்த மருத்துவ சேவைகள் இருப்பது அவசியம். உணவு, தங்கும் இடம் என்பன சிறப்பான முறையில் அமைய வேண்டும். பணம், மருந்து, தங்கும் இடம் போன்ற வசதிகளுக்காக பிரிட்டனும் பிரான்ஸும் தமது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், அவை ஒழுங்கான முறையில் சென்றடைவதற்கான தேவைகள் உள்ளது.

இறுதியாக இங்கு நாம் குறுகிய கால நடவடிக்கைகளிலேயே எமது கவனத்தைச் செலுத்தியிருக்கின்றோம். ஆனால், நீண்ட கால தேவைகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது. இலங்கை அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாகும். ஆதலால், ஐ.நா. உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் உயர்மட்ட தரத்தை அது கொண்டுள்ளது. அதேசமயம், அதன் கடப்பாடுகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதாக அமைய வேண்டும். அதேவேளை, வன்முறையானது தமிழ் மக்களுக்கு பயனளிக்கப் போவதில்லை என்றும் வன்முறைகளைக் கைவிடுவதே முன்னேற்றத்திற்குக் கொண்டுவரும் என்பதும் நீண்ட காலமாக ஐரோப்பிய ஒன்றியும் கொண்டிருக்கும் நிலைப்பாடாகும் என்பதை புலிகளுக்குத் திரும்பத் திரும்பக் கூறுகின்றோம்.

எதிர்காலத்தில் ஒன்றாக வாழ்வதற்குரிய வழி முறைகளை இலங்கைச் சமூகங்கள் கண்டுகொள்ள வேண்டும். அதனை தனியாக இராணுவ வெற்றியினால் மட்டும் வென்றெடுக்க முடியாது. தமிழர்களின் எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் ஊற்றியதாக காணப்படுவது அரசியல் ரீதியாக அந்நியப்படுத்தப்பட்டிருப்பதாக காணப்படுவதும் மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் உணர்வாகும். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கம் தொடர்பாக இந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்ணியமான முறையிலும் தார்மிகக் கொள்கை அடிப்படையிலுமான அரசியல் நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணவேண்டும்.

இரு தரப்பு தொடர்பாகவும் நாம் எந்தவிதமான வேறுபட்ட உணர்வுகளையும் கொண்டிருக்கவில்லை. 3 தசாப்தங்களாக மேற்கொண்ட முயற்சிக்கு இப்போது வெற்றிகள் கிடைத்திருப்பதாக இலங்கை அரசாங்கம் நம்புகின்றது. ஆனால், அதிக எண்ணிக்கையான பொதுமக்களின் உயிர்களுக்கு விலை செலுத்தப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாகும். அது தற்போது அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றது. இந்த நிலைவரத்தின் பாரதூரத் தன்மையை கருத்தில் கொண்டு பொதுமக்களின் துன்பத்தை நிறுத்துவதற்கான கடமை சர்வதேச சமூகத்திற்குள்ளது.

எங்களுக்கு இது என்ன தொடர்பு என்று மக்கள் எங்களைக் கேட்கலாம். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகிய நாம் இறைமையுள்ள அரசாங்கங்களும் சர்வதேச சமூகமும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்தும் விலகிச் செல்ல முடியாது. இலங்கையின் பொதுமக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் தோல்வி கண்டிருப்பதையிட்டு எங்களுடன் இணைந்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இலங்கை அரசாங்கத்திடம் எமது வேண்டுகோளை நேரடியாக விடுத்தோம். இலங்கை அரசாங்கம் வெற்றிகொண்ட தருணத்திலுள்ளது. இந்தத் தருணத்தில் அது மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவது அவசியம். அத்துடன், சமாதானத்தை வென்றெடுக்கும் வழிமுறைகளை வழியைக் கண்டறிய சுய ஆர்வம் காட்டுவதும் அவசியமானதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *