புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘எமது நாட்டில் இதுவரை இயற்றப்பட்டுள்ள அரசியலமைப்புகள் தொடர்பில் மக்களின் அனுமதி பெறப்படவில்லை. சோல்பரி அரசமைப்பு, 1972ஆம் ஆண்டின் அரசமைப்பு மற்றும் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு என்பன மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. மக்களுக்குரிய அடிப்படைச் சட்டங்களே அரசமைப்பாகும். எனவே, நாம் நிச்சயம் மக்களிடம் அனுமதி கோருவோம். இது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும்.
புதிய அரசமைப்பை இயற்றும்போது 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணியில் உள்ள யோசனைகள் கருத்திற்கொள்ளப்படும். புதிதாக யோசனைகள் உள்வாங்கப்படும். கோத்தாபய ஆட்சிக் காலத்திலும் குழுவொன்று அமைக்கப்பட்டது, அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து, சாதகமான, மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய விடயங்களை மையப்படுத்திய வகையில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்.
புதிய நாடாளுமன்றத்தில் முதல் மூன்று, நான்கு மாதங்களில் அரசமைப்பு தொடர்பில் குறைந்தளவிலேயே அவதானம் செலுத்தப்படும். பொருளாதாரம் பற்றியே கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதன்பிறகு அரசியலமைப்புத் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்’ – என்றார்.