அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பை தங்கள் வசம் ஒப்படைக்க ஜே.வி.பி. கோரிக்கை

sri-lankan-jvp.jpgஇடம் பெயர்ந்துள்ள மக்களின் உளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான பலமும் அனுபவமும் தங்களிடம் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது உறுப்பினர்களையும் முற்றாக அழிக்கும் வரை யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக அரசு கூறமுடியாதெனவும் தெரிவித்துள்ள ஜே.வி.பி., அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அரசு தனது அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஜே.வி.பி. நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் பாராளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெருமளவான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புலிகளிடமிருந்து அம்மக்களை எமது இராணுவத்தினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், இம்மக்களின் தேவைகளை தொடர்ந்து அவர்களால் செய்வது சிரமமென்ற முறையில் அரசாங்கம் அம்மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வருகின்றது. இதில் சிக்கலையும் அது எதிர்கொண்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் கண்ணுக்கெட்டிய அல்லது தெரிகின்ற பிரச்சினைகளை தேவைகளை நிறைவு செய்தால் போதாது. அவர்களது உளப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்நிலையில் இதனை செய்வதற்கு சிறந்த முகாமைத்துவம் கொண்ட கட்டமைப்புத் தேவை. அதனை எமது செந்தாரகை நிவாரண இயக்கம் செய்யத் தயாராகவுள்ளது.

எனவே, இம்முகாம்களை அவ்வியக்கத்திடம் கையளிக்குமாறு நாம் கேட்கின்றோம். யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அரசு கூறுகின்றது. உண்மையில் புலிகளின் தலைவரையும் அவர்களது உறுப்பினர்கள் அனைவரையும் அழிப்பதன் மூலமே யுத்த வெற்றியை ஈட்ட முடியுமே தவிர நிலப்பரப்பை விடுவிப்பதனால் வெற்றி வந்துவிடாது. இவ்வாறு தலைவரையும் உறுப்பினர்களையும் அழியாதுவிட்டால் அவர்கள் கெரில்லா வழிமுறைக்கு சென்றுவிடுவர்.

அரசாங்கம் மக்களுக்கு, சர்வதேச அழுத்தத்துக்கு கட்டுப்பட வில்லையென காட்ட சுவிடன் தூதுவரின் விஜயத்தை தடுத்ததாக காண்பித்தது. சுவிடனிலுள்ள இலங்கை தூதர், அவர் இதற்காக விஸா விண்ணப்பிக்கவில்லையென தெரிவிக்கின்ற அதேநேரத்தில் ஒரே நேரத்தில் பல தூதர்களை கவனிப்பது சிரமம், எனவே, வேறு ஒரு தடவை சந்தர்ப்பமளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதனை பத்திரிகைகள் தெரிவித்தன. தாம் தேசப்பற்றாளர்களென காட்ட முற்படுகின்றனர்.  யுத்தத்தின் போது கனரக ஆயுதம் பாவிப்பதா இல்லையா என்பதை படை நடவடிக்கையை மேற்கொள்பவரான தளபதியே தீர்மானிப்பார். இந்நிலையில் கனரக ஆயுதம் பாவிக்கப்பட மாட்டாதென அரசு கூறுகின்றது. இவ்வாறு செல்வதற்கு சர்வதேச அழுத்தமே காரணம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • மாயா
    மாயா

    அகதிகளுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு. ஆளாளுக்கு அகதிகளுக்கு உதவ அடிபடுகிறார்கள். உங்கள் அரசியலில் அவர்கள் இனியாவது மேம்பட்டு வாழட்டும். அதிகமாக கஸ்ட்டப்பட்டு விட்டார்கள். நல்ல காலம் பிறக்கட்டும். வன்னி செழித்து ஓங்கட்டும். ஒரே கொடியின் கீழ் என்றாலும் பரவாயில்லை. கொடியே இல்லாட்டி கூட பரவாயில்லை………மக்கள் நிம்மதியாக இருந்தால் அது போதும்.

    Reply