லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் நேற்றையதினம் கடுமையாக குண்டுவீசி தாக்கியது. கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து கடலோர நகரமான டயரில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த நகரில் இருக்கும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டு இருந்தது. எனினும், வெள்ளிக்கிழமை தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் சார்பில் எந்த உத்தரவும் வெளியிடப்படவில்லை.
உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் இடம்பெற்றுள்ளதாக லெபனான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தாக்குதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட மற்ற உடல் பாகங்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) மற்ற நகரங்களில் நடந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டு அமைப்புகளைச் சேர்ந்த ஏழு மருத்துவர்கள் உள்ளடங்குகிறார்கள். இதே போல் வரலாற்று நகரமான பால்பெக்கைச் சுற்றியுள்ள கிழக்கு சமவெளிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
லெபனானில் கடந்த ஆண்டு இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 3136 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13, 979 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 619 பேர் பெண்கள் மற்றும் 194 குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.