BRICS உறுப்புரிமைக்கான இலங்கை முன்வைத்த விண்ணப்பம் நிராகரிப்பு..?

BRICS உறுப்புரிமைக்கான இலங்கை முன்வைத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

 

இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட BRICS மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு இலங்கை விண்ணப்பித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துகொள்ளும் இலங்கையின் விருப்பத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், BRICS உறுப்பு நாடுகளில் உள்ள தரப்பினரிடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாகவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 22, 24ஆம் திகதிகளில் ரஷ்யாவின் கசான் நகரில் BRICS உறுப்பு நாடுகளுடன் நடைபெற்ற மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவின் தலைவராக இருந்த வெளி விவகாரச் செயலர் அருணி விஜேவர்தன, இது தொடர்பில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

 

புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள நாடுகளின் கோரிக்கைகளுக்கு BRICS உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

இலங்கை உட்பட பல நாடுகளின் BRICS உறுப்புரிமைக்கான எதிர்பார்க்கப்படும் கோரிக்கைகள், எதிர்காலத்தில் BRICS உறுப்பு நாடுகளால் பரிசீலிக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன், புதிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இணையும் இலங்கையின் எதிர்பார்ப்பு அதன் தலைவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, BRICS அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வரவேற்பதாக இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகமும் X வலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளது.

 

இலங்கை உட்பட விண்ணப்பித்த பிற நாடுகளை உரிய காலத்தில் முழுமையான ஆலோசனை மற்றும் உடன்பாட்டுடன் BRICS பரிசீலிக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *