ஒக்டோபர் 11, 2024 முதல் நவம்பர் 11, 2024 வரையிலான காலத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியிலான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான மொத்தம் 490 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த பதிவுகள் பற்றி தகவல்கள் அறிவிக்கப்பட்டவுடன் உரிய சமூக ஊடக நிறுவனங்கள் அவ்வாறான 184 முறைப்பாடுகளின் இணைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கியதாக தேர்தல் ஆணைக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இருப்பினும், 87 முறைப்பாடுகள் தொடர்பான இணைப்புகள் அல்லது உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக நிறுவனங்கள் மறுத்துள்ளன.
219 முறைப்பாடுகள் தொடர்பான உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் மதிப்பாய்வு செய்யவில்லை என்று தேர்தல் ஆணைக்கழு தெரிவித்துள்ளது.
வெறுப்புப் பேச்சு, இனம் மற்றும் மதத்திற்கு எதிரான அவதூறு அறிக்கைகள், தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் தவறான அல்லது போலியான தகவல் பரிமாற்றம் தொடர்பான பதிவுகள் மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.