தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கான போட்டியில் 527 பேர் காத்திருப்பில் உள்ளனர்.
2024ம் ஆண்டு்க்கான நாடாளுமன்றத் தேர்தல் தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கவுள்ள 29 தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்காக 527 பேர் காத்திருப்பில் உள்ளனர்.
27 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் தங்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளன.
அதன் பிரகாரம் அரசியல் கட்சிகளின் மூலமாக தேசியப்பட்டியல் நியமனத்துக்காக 516 பேரின் பெயர்களும், இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மூலம் 11 பேரின் பெயர்களும் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அருணலு ஜனதா பெரமுண, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக ஐக்கிய முன்னணி, ஐக்கிய ஜனநாயகக் குரல், ஜனஅரகல கூட்டமைப்பு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஜனசெத பெரமுண, தேசிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக முன்னணி, இரண்டாம் தலைமுறை, தேசப்பிரேமி ஜனபலவேகய, புதிய ஜனநாயக முன்னணியும் நிதஹஸ் ஜனதா பெரமுண, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, லிபரல் ஜனநாயக கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண, இலங்கை சமாஜவாதி கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேசியப் பட்டியல் அபேட்சகர்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளன.
அதற்கடுத்ததாக அநுராதபுரம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடும் இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தேசியப் பட்டியல் அபேட்சகர்களுக்கான பட்டியலை சமர்ப்பித்துள்ளன.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பித்த தேசியப் பட்டியல் தொழில்நுட்ப காரணிகளினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.