புலிகள் இயக்கத்தின் கணனி நிழல் வெளிப் பயங்கரவாதம் இராணுவ இணையத் தளத்தில் ஊடுருவியிருப்பதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான Army.lk இணையத்தை புலிகள் இயக்கத்தினரோ அல்லது அவர்களுக்குச் சார்பானவர்களோ சட்ட விரோதமாகத் துண்டித்துள்ளதுடன், சில கொடூரமான படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். புலிகளின் இந்தப் புதிய வடிவத்திலான பயங்கரவாதக் குற்றச் செயலுக்கு எதிராக சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்ப வழக்குத் தொடர முடியுமென்றும் பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இராணுவ இணையத் தளத்தைக் கூடுதலானோர் பார்வையிட்டு வருவதால், புலிகளுக்கும் அவர்களின் ஊது குழல்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புலிகளின் பயங்கரவாதத்திற்குப் பின்னால் உள்ள பல உண்மைகள் வெளிவந்ததுடன், அவர்களின் கொடூரச் செயல்களும் அம்பலத்துக்கு வந்தன. இதன் காரணமாக அவர்கள் நிழல்வெளிப் பயங்கரவாதத்தை மேற்கொண்டுள்ளார்களென்று தெரிவித்துள்ள பிரிகேடியர் நாணயக்கார, இராணுவ இணையத் தளத்தை வழமைபோன்று இயங்கச் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இணையத்தின் ஆசிரியர் பீடம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய www. Army.lk இணையத்தளம் நேற்றுப் பிற்பகலில் இருந்து வழமைபோன்று இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.