வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தென்மராட்சி நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக தென்மராட்சியில் தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்படுகின்றன. யாழ். அரச அதிபர் மற்றும் தென்மராட்சிக் கல்வி வலய அதிகாரிகளின் ஏற்பாட்டிலேயே இந்தப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பாடசாலைகளுக்கான ஆசிரிய வளம் ஓரளவு இருக்கின்ற போதிலும் தளபாடங்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் யாழ். மாவட்டத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள் தளபாடங்களை வழங்கி உதவ வேண்டுமெனவும் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கைதடி சைவச் சிறுவர் இல்லம், கைதடி பல்கலைக்கழக மாணவர் விடுதி மற்றும் கைதடி பனைவள ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 600 வரையான மாணவர்களின் கல்விக்காக கைதடி அரச மருந்தகத்தில் ஒரு தற்காலிக பாடசாலை அமைக்கப்படுகிறது. மிருசுவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 500 வரையான மாணவர்களின் கல்விக்காக இந்த நலன்புரி நிலையத்திற்கு அண்மையிலுள்ள தனியார் வீடொன்றிலும் தற்காலிக பாடசாலையொன்று அமைக்கப்படுகின்றது.