“தலைநகரில் இழக்கப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம் – மூன்றாக அதிகரித்த முஸ்லீம் பிரதிநிதித்துவம்” – மனோகணேசன்

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆட்சி அமைக்கும் அனுர அரசுக்கும் வாழ்த்துக்கள்!

நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற நிகழ்வுகள் நடக்கும் கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்து கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

இன்று இருந்து ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது.

பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒவ்வொரு இனமும் தமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வது, அதிகரிப்பது, இயல்பான ஜனநாயக செயற்பாடுகளாகும்.

ஆனால், கொழும்பு தலைநகர் மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அது இன்று சாத்திய படவில்லை.

2010ம் வருடம் கண்டி மாவட்டத்து தமிழர் பிரதிநிதித்துவத்தை பெற நான் ஒரு கட்சி தலைவராக மேற்கொண்ட முயற்சியின் போது, இத்தகைய ஒரு “வெற்றி பெறாமை” என்ற சூழலை எதிர் கொண்டேன்.

பின்னர் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்தேன். அது வரலாறு.

நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் சக வேட்பாளர் தம்பி லோஷன் புதிய அனுபவங்களை கற்று கொண்டார். கடும் முயற்சியாளர், சமூக பற்றாளரான அவருக்கு எனது பாராட்டுகள்!

கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாக அதிகரித்தும் கொண்ட, தமிழ் பேசும் சகோதர முஸ்லிம் உடன்பிறப்புகளுக்கு எனது இதயபூர்வ பாராட்டுகள்!

எமக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் அதன் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஏ.ஆர்.வி.லோஷன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர்களால் வெற்றிபெற முடியாமல் போயுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *