நொவெம்பர் 16, 2024
மருத்துவர் ப.சத்தியலிங்கம்
பதில் பொதுச் செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
வவுனியா.
தேசியப் பட்டியல் இருக்கையை சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கு வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!
வணக்கம் !
நடந்து முடிந்த தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக (இதஅக), அச்சு மற்றும் இலத்திரினியல் ஊடகங்களும் போலித் தேசியம் பேசிய கட்சிகளும் மிகக் கடுமையான பரப்புரையை மேற்கொண்டன. குறிப்பாக எம்.ஏ. சுமந்தின் அவர்களுக்கு எதிராக கீழ்த்தமான பரப்புரையை மேற்கொண்டன. “தமிழரசுக் கட்சிக்குப் போட்டாலும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்றும் பரப்புரை செய்யப்பட்டது.
இப்படியான பரப்புரையையும் தாண்டி இதஅக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருந்தும் இதஅக யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் தனது பிரநித்துவத்தை இழந்துள்ளது. இதனால் இதஅகட்சியின் வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இதஅக க்கு கிடைத்த மொத்த வாக்குகள் 63,327 ஆகும். மேலதிகமாக 3,000 வாக்குகள் கிடைத்திருந்தால் இன்னுமொரு இடம் கிடைத்திருக்கும். நியமனம் மறுக்கப்பட்டதும் சுயேட்சையாகக் களம் இறங்கிய இருவர் இதற்கு முழுக் காரணம் ஆகும்.
இதஅக இன் அடிப்படை வேட்கையான தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற கோட்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்மக்கள் மட்டுமே எண்பித் துள்ளார்கள். மொத்தம் 96,975 (33.78%) வாக்குகளைப் பெற்று 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
நல்லாட்சிக் காலத்தில் (2015 – 2019) வரைவு வடிவில் ஒரு அரசியல் யாப்பு வரையப்பட்டது. அதனை அன்றைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்க வேறு சில ஆவணங்களுடன் அரசியலமைப்புச் சபையில் சனவரி 11, 2019 அன்று சமர்ப்பித்தார். இந்த ஆவணம் ஒரு விவாதப் பத்திரம் என அழைக்கப்பட்டாலும் – அது ஒரு புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு என்று அழைக்கப்பட்டாலும்- அது கிட்டத்தட்ட விரிவான அரசியலமைப்புத் திட்டமாகும்.
இந்தத் திட்டம் தற்போதைய 1978 அரசியலமைப்பின் கட்டமைப்பு மற்றும் தன்மையில் இருந்து விலகிக் காணப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை அகற்றப்படுவது அதன் மையப்புள்ளியாகும். இந்த அரசியலமைப்புத் திட்டத்தை உருவாக்குவதில் இருவர் முக்கிய பங்கு வகித்திருந்தனர். ஒருவர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றவர் சனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆவார்கள்.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் அறிக்கையில் “புதிய அரசியலமைப்பொன்றுக்கான வரைவு தயாரிக்கப்படுவதோடுஇ அது பொதுமக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரையாடலுக்கு இலக்காக்கப்பட்ட பின்னர் அவசியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொது வாக்கெடுப்புக்கு மக்கள் முன் வைக்கப்படும்” எனக் கூறியுள்ளது. சனாதிபதி அனுர குமார திசநாயக்க தேர்தல் பரப்புரைக் காலத்தில் நல்லாட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல்யாப்பினை முன்னெடுக்கப் போவதாகச் சொல்லியுள்ளார்.
எனவே சட்டப் புலமை வாய்ந்த, அரசியலமைப்பு உருவாக்கத்தில் பட்டறிவும் தேர்ச்சியும் பெற்ற ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேவைப்படுகிறார். ஏற்கனவே நல்லாட்சிக் காலத்தில் வரையப்பட்ட அரசியல்யாப்பு வரைவை எழுதியதில் பெரும் பங்காற்றிய சனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களே இதற்குப் பொருத்தமானவர் என்பதில் எவருக்கும் எந்த அய்யமும் இருக்காது.
இதஅக க்கு கிடைத்த தேசியப் பட்டியல் இருக்கை ஒன்றின் மூலம் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட முன்னாள் நா.உறுப்பினரும் சனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன்இ நாடாளுமன்றம் செல்லமாட்டேன் எனக் கூறியுள்ளார். இருந்தும் கட்சியின் மத்திய குழுவே தேசியப் பட்டியல் இருக்கைகளைத் தீர்மானிக்கும் என்றும் அதற்குத் தான் கட்டுப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் இருக்கையை சுமந்திரன் அவர்களுக்கு வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
மிக்க அன்புடன்
வே. தங்கவேலு
தலைவர்
தம்பிராசா வசந்தகுமார்
பொதுச் செயலாளர்