மோதல் வலயத்தில் தற்போதும் 50 ஆயிரம் பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் சாத்தியமான அளவுக்கு அவர்களை வெளியே கொண்டுவருவது அவசியம் என்று ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான மோதல் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அவர் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபின் நியூயோர்க் திரும்பியிருக்கும் ஜோன்ஹோம்ஸ் செய்தியாளர்கள் மத்தியில் புதன்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இடம்பெறும் மோதலால் இந்த மக்கள் பாரிய அபாயத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஷெல் வீச்சு, சூடுகளால் மாத்திரமல்லாமல் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளும் மிக மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையிலிருந்து திரும்பியிருக்கும் ஹோம்ஸ் “ஏமாற்றம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக ஐ.நா.விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்திருக்கிறது. அவர் பாதுகாப்புச்சபைக்கு அறிக்கையிட வேண்டுமென சபையின் பல உறுப்பினர்கள் கருதுவதாகவும் ஆனால், நேற்று வியாழக்கிழமை நிகழ்ச்சி நிரலில் சைபிரஸ் விவகாரமே உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை இந்த விடயம் குறித்து பாதுகாப்புச் சபையில் அறிக்கையிடுவதற்கு சீனா எதிர்ப்பு காட்டியுள்ளதாக தகவலறிந்த உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது. ஆயினும், ஏனைய விடயங்களுடன் இலங்கை விவகாரம் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிக்கை சமர்பிக்கப்படும் இடம் குறித்து சீனா ஆட்சேபனை தெரிவித்திருப்பதாகவும் அதனால், ஐ.நா. தலைமையக அடித்தளத்தில் இலங்கை விடயம் குறித்து ஹோம்ஸ் அறிக்கை சமர்ப்பிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.