நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது – யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவர்!

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.” – இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

 

யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

 

“யாழ்ப்பாணத்துக்கு வந்ததுள்ளமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிலும் அனைவரும் எதிர்பார்க்கின்ற ஊடக அமையத்துக்கு வந்துள்ளமை மேலும் சந்தோசமாக உள்ளது.

 

வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற எங்களுடைய சகோதர – சகோரிகளின் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்கின்றது, இங்கு அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள், இந்த வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்கின்றார்கள் என்பவற்றை அறிந்துகொள்வதே எமது இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது.

 

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மிகப் பெரிய அளவில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் தெற்கை மையப்படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரும்பான்மையாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

 

நான் இன்று பருத்தித்துறைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்த ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன். அதாவது பன்மைத்துவத்தில் ஒற்றுமை என்று இருந்தது.

 

உண்மையில் அந்த வாக்கியம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரியாவே பிரதிபலித்துள்ளது. தற்போது இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நான் இங்கு விஐயம் செய்வது மிகவும் அர்த்தம் உள்ள ஒன்றாகவே கருதுகின்றேன்.

 

நான் வடக்கு மாகாணத்துக்கு முதல் தடவையாகக் கொவிட் கால கட்டத்திலேயே வந்திருந்தேன். அந்தக் கால கட்டத்திலேதான் சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை சீன அரசு இலங்கைக்கு வழங்கி இருந்தது.

 

அப்போது சினோபாம் என்ற எமது தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கு முழுவதும் முழுமையாகப் பாவிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் சீன அரசு வலியுறுத்திக் கூறியிருந்தது. இவ்வாறு நாம் வலியுறுத்திக் கூறியதாலேயே இங்குள்ள மக்களுக்கும் அந்தத் தடுப்பூசிகள் பாவிக்கப்பட்டன.

 

இவ்வாறு வடக்கு, கிழக்கிலுள்ள எங்களுடைய சகோதர – சகோதரிகளுக்கு நாம் தடுப்பூசிகளை வழங்கியதைத் தொடர்ந்து இங்குள்ளவர்களுக்கு எங்களுடைய பல்வேறு உதவிகளைச் செய்தோம்.

 

அதனடிப்படையில் வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினோம். அதேபோன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும், மீன்பிடி உபகரணங்களையும் வழங்கினோம்.

 

அந்த ஆண்டின் முதல் அரைநாண்டு காலத்தில் சீன அரசால் பல மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வடக்கு மாகாணத்துக்கு மட்டும் வழங்கியிருக்கின்றோம். இதற்கமைய வீட்டுத் திட்டம், அரிசி, மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றை வழங்கினோம்.

 

இவற்றில் அரிசியை முழுமையாக வழங்கியுள்ளோம். ஆனாலும், வீட்டுத் திட்டம் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

 

சீன அரசு வழங்கிய உதவிகளின் பட்டியல் இலங்கை அரசால் தயாரிக்கப்பட்டவைதான். அந்தப் பட்டியலுக்கமைய எமது உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

சீனாவினுடைய நீண்டகால நண்பனாக இலங்கை இருக்கின்றது. ஆகையினால் இலங்கை அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் சீன அரசும் மதிக்கும்.

 

இலங்கை அரசுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு இணக்கப்பாட்டுக்கு முன்னேற்பாடான ஒரு ஒப்பந்தத்தை முதன் முதலில் சீனாதான் எழுதியது.

 

அதனைக் கடந்த ஆண்டு செய்திருக்கின்றோம். இதில் இருந்து நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளக் கூடியது என்னவெனில் சீன அரசு ஒரு முன்னுதாரணமாக இந்த விடயங்களைச் செய்து வருகின்றது என்பதைப் பார்க்கலாம்.

 

இலங்கையினுடைய மிக நெருக்கமான அயல்நாடாக இந்தியா இருக்கின்றது. அதனால் இலந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு பலப்படுவதையும், பொருளாதார ரீதியான நெருக்கம் பலப்படுவதையும் நாங்களும் விரும்புகின்றோம்.

இவ்வாறான நிலைமையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத் கூறியிருக்கின்றார்.

 

இது மிகவும் சந்தோசமான விடயம். அவ்வாறு அவர்கள் விஜயம் செய்வதை நாங்கள் விரும்புகின்றோம். அதன் பிற்பாடு இலங்கை ஜனாதிபதி அவருக்கு ஏற்ற வகையில் பொருத்தமான நேரத்தில் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளலாம்.

 

ஏனெனில் சீனாவுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையில் பொருளாதார மேம்பாடுகளும் பரிமாற்றங்களும் வளர்ந்து வர வேண்டுமென்றே நாங்களும் விரும்புகின்றோம்.

 

சீனாவுக்கு வடக்கு மக்களுடன் செய்ய வேண்டிய கலாசார மற்றும் கல்வி ரீதியான இரு தரப்பு பரிமாற்றங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன.

 

சீன அரசு இலங்கைக்கு அதிகூடிய வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் வழங்குகின்ற ஒரு நாடாகவே இருந்து வருகின்றது.

 

ஏனென்றால் சீனாவைப் பொறுத்த வரையில் இலங்கை மக்களின் ஆற்றலும் திறமையும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாக உள்ளது.

 

எனக்குத் தெரிந்தவரைக்கும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும் சீனாசார் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கல்விசார் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றே வருகின்றன.

 

நான் அறிந்த வரையில் சீன புலமையாளர் யாழ். பல்கலைக்கழகத்திலும், யாழ். பல்கலைக்கழகப் புலமையாளர்கள் சீனப் பல்கலைக்கழகத்திலும் தங்களுடைய கற்கை நெறிகளைக் கற்று வருகின்றார்கள்.

 

எனக்கு குழப்பகரமான ஒரு உணர்வை ஏற்படுத்துவது என்னவெனில் என்னுடைய சக உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும் சீனப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்கு விரும்புகின்றதால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தோடு தொடர்பை ஏற்படுத்துகின்றபோது அவர்களால் உரிய முறையில் தொடர்பை ஏற்படுத்துவதில்லை என்பது குழப்பகரமான உணர்வைத் தருகின்றது.

 

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன்.

 

அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.

 

இதனூடாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட்டு ஒளிமயமான எதிர்காலம் இந்த நாட்டில் ஏற்படுவதற்கான ஒரு குறியீடாகவே நான் இதனைப் பார்க்கின்றேன்.” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *