வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணங்கள், உதவிகள் குறித்து ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காஸி பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை ஜப்பான் அரசு தொடர்ந்தும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.
வவுனியா கதிர்காமர், அருணாசலம் நிவாரணக் கிராமங்களுக்கு ஜப்பானின் விசேட தூதுவர் நேற்று விஜயம் செய்த போது மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவரை வரவேற்று அழைத்துச் சென்றார். வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் நிவாரணக் கிராமங்களில் மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும் விளக்கமளித்தார்.
அரசாங்கம் இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கிவரும் சுகாதாரம் மற்றும் கல்வி, நிவாரணம், தங்குமிட வசதிகள் குறித்து அதி கூடிய கவனத்தை ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
விசேட தூதுவர் யசூசி அகாசி மேலும் கூறியதாவது:- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்களுக்கு அரசாங்கம் செய்து வரும் பணிகளைப் பார்க்கின்ற போது அவர்களை பாராட்டவேண்டும்.
இம் மக்களின் நலனோம்பும் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளை ஜனாதிபதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரும் கூடிய கவனம் எடுத்து செயற்பட்டு வருகின்றமை வெகுவாக பாராட்டுக்குரியது. இலங்கையில் சமாதானம் ஏற்பட எம்மால் ஆன அனைத்து உதவிகளையும் அரசாங்கத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை ஜப்பான் அரசாங்கமும், இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகமும் பெற்றுக் கொடுக்கவுள்ளது என்றும் தெரிவித்தார்.