இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு ஆரம்பமாகியிருக்கும் நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தந்து தனது கொள்கைப் பிரகடன உரையை உரையாற்றினார்.
மேலும்,சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23 ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தமது கொள்கை உரையில் பேசிய ஜனாதிபதி
மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்.
இதற்காக யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் அனைவரும் சுதந்திரமாக செயற்படும் வகையில் நீதித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
நாட்டில் யாரும் நீதிக்கு மேன்மையானவர்களாக இருக்க மாட்டார்கள்.நாட்டின் அரச சேவை தொடர்பாக மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள்.
தற்போதைய அரசாங்கமே அதிகப்படியான அரச சேசையாளர்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். அந்தவகையில், திருப்திகரமான அரச சேவைத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் மக்கள் பெரும்பான்மையான ஆணையை வழங்கிய அரசாங்கம் என்ற அடிப்படையில், நாடாளுமன்றின் கௌரவத்தை பேணுவது முதலாவது கடமையாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறை நிரப்பு பிரேரணை எதிர்வரும் மாதம் சமர்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
அத்துடன், வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்றும், வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள் என்றே நான் கருதுவேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார்.
தற்சமயம் நாடாளுமன்றத்தில் ஆற்றி வரும் தமது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை எனவும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் நாடாளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் இந்த நாடாளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.