மன்னார் மாவட்டம் முசலிப் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ள குடும்பங்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் வரவேற்றுளள்து. இப் பிரதேசத்திலுள்ள சவேரியாபுரத்திலிருந்து இடம் பெயர்ந்துள்ள 400இற்கும் மேற்பட்டவர்கள் இரண்டு வருடங்களின் பின்பு நேற்று மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 கிராமங்களை உள்ளடக்கிய மேலும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த இடங்களுக்குத் திரும்பத் தங்களைப் பதிவு செய்துள்ளனர் என ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடு சிறிய அளவிலேயே இருந்தாலும், இது வரவேற்கப்பட வேண்டிய முக்கியமான ஒரு நிகழ்வு என்று உயர் ஸ்தானிகராலயம் மேலும் கருத்து வெளியிட்டுள்ளது. இதே போன்று வடபகுதியில் இடம் பெயர்ந்த நிலையில் இருக்கும் மக்களும் மீண்டும் தமது இருப்பிடங்களுக்குச் செல்வார்கள் எனத் தாங்கள் நம்புவதாக உயர் ஸ்தானிகராலய இலங்கைப் பிரதிநிதி அமின் அவாத் கூறுகின்றார்.