ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான சேகு இஸ்ஸதீன் வேதாந்தி என்ற பெயரில் பிரபல கவிஞராக அறியப்பட்டவர். முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் உடன் இணைந்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தாபித்தவர்களில் இவரும் ஒருவர்.
அத்துடன் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இதன் பின்னர் பேரியல் அஷ்ரப் தலைவராக செயற்பட்ட காலத்தில் தேசிய ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குப் பிரவேசித்த இவர், ஊடகத்துறை பிரதியமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
இலங்கையின் அரச ஊடகத்துறையில் தமிழ், முஸ்லிம் பணியாளர்களை கூடுதலான அளவில் நியமித்தல், அரச தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழிக்கான சம அந்தஸ்து போன்றவற்றில் சேகு இஸ்ஸதீன் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை அவர் அக்கரைப்பற்றில் காலமாகியுள்ளார்.
தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவின் விசேட செயலாளரான சட்டத்தரணி ஹஸானா இஸ்ஸதீன், இவரது புதல்விகளில் ஒருவராவார்.