அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசின் இந்த திட்டத்திற்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இது குறித்து காணொலி மூலம் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவர்களுக்கு சொல்லித் தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று இத்தகைய சட்டத்துக்கு சிறுவர்கள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இச்சூழலில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டத்தை மீறி, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு 50 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கும் மசோதாவையும் முக்கிய கட்சிகள் ஆதரித்துள்ளன. இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் 102 வாக்குகள் ஆதரவாகவும், 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.