புல்மோட்டை வைத்தியசாலையிலிருந்து தம்புள்ள வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் காயமடைந்தவர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களின் உதவிக்கென வந்த 66 பேர் கொண்டு வரப்பட்டுள்ளனர். புதன் 28 பேரும் செவ்வாய் 38 பேரும் இவ்வாறு கொண்டுவரப்பட்டதாக தம்புள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த 27 ஆம் திகதி பதவியா வைத்தியசாலையிலிருந்தும் 52 நோயாளர்கள் இவ்வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட 118 பேரும் தம்புள்ள வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், காயமடைந்த 34 ஆண்களும் 26 பெண்களும் 9 குழந்தைகளும் காணப்படுகின்றனர். இக்குழந்தைகளில் ஒன்று மட்டுமே ஆண் குழந்தையாகும். ஏனைய 49 பேரும் அவர்களுக்கு உதவிக்கென வந்த குடும்பத்தவர்களாவர்.
இவர்கள் நெடுங்கேணி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, சண்டிலிப்பாய் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது. புதன் காலையும் செவ்வாய் இரவும் இந்நோயாளருக்கு உணவுகள் ஏதும் வழங்கப்படாமையால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் சில தனியார் ஸ்தாபனங்கள் தம்புள்ள நகர உணவகங்களிலிருந்து அவர்களுக்கான உணவைப் பெற்றுக்கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தம்புள்ள வைத்தியசாலை புதிய கட்டிடத் தொகுதியில் நோயாளர்கள் தங்குவதற்குரிய ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை புதிய கட்டிடத் தொகுதியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.