உள்ளூராட்சிசபை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு நுவரெலியா மாநகரசபையில் தீர்மானம்

sri-lanka-upcountry.jpg அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருக்கும் உள்ளூராட்சிசபை சட்டமூலத்திற்கு எதிர்புத் தெரிவித்து நுவரெலியா மாநகரசபையின் ஏப்ரல் மாதத்திற்கான பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன தலைமையில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகரசபை உறுப்பினர் எல்.நேருஜி மேற்படி தீர்மானத்தை சபைக்கு சமர்ப்பித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்;

அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருக்கும் உள்ளூராட்சிசபை சட்டமூலம் அமுலுக்கு வந்தால் சிறுபான்மையினரதும் சிறுபான்மை கட்சிகளினதும் பிரதிநிதித்துவம் குறையும். குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை போன்ற மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மாத்திரமல்லாமல் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களும் குறைவடையும். எனவே உள்ளூராட்சி சபைகளும் மாகாணசபைகளும் இந்த புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இந்த புதிய சட்டட மூலத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்ற போது மாகாண சபைகளின் தீர்மானத்துடன் மீண்டும் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே மாகாணசபைகளும் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்.

கடந்த 1978 ஆம் ஆண்டிலிருந்து நுவரெலியாவில் வருடம் தோறும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டுவந்த ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் அரசியல் தலையீட்டால் இம் முறை சிறப்பாக நடைபெறவில்லை. மலர்க் கண்காட்சியை தவிர ஏனைய நிகழ்ச்சிகள் முறையாக நடைபெறவில்லை. ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் நடத்துவதற்கு நகரமுதல்வருக்கு சகல அதிகாரங்களும் வழங்கவேண்டும்.

நுவரெலியாவில் காணிவேல் களியாட்ட விழாக்கள் நடத்துவதற்கு பாதுகாப்பு சூழ்நிலையை காரணம்காட்டி பொலிஸார் அனுமதிவழங்கவில்லை. ஆனால், பண்டாரவளையில் காணிவேல் களியாட்ட விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நுவரெலியாவிற்கு வருகை தந்த உல்லாச பிரயாணிகள் அதிகமானோர் பண்டாரவளைக்குச் சென்றனர். இதனால், நுவரெலியா வாழ் மக்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. எனவே எதிர்வரும் வருடங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் நகரமுதல்வர் சகல அதிகாரங்களையும் பெற்று சிறந்த முறையில் வசந்த கால நிகழ்வுகள் நடத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றார்.

இக்கூட்டத்தில் பிரதி நகர முதல்வர் கிருஷ்ணசாமி சந்திரசேகரன் உரையாற்றுகையில் ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் சிறந்த முறையில் நடத்தமுடியாமல் போனதற்கான காரணத்தை நகரமுதல்வர் பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரிவிக்கவேண்டும்.

வழமையாக ஏப்ரல் வசந்தகாலம் தற்காலிக கடைகளை மாநகரசபைதான் வழங்கி வந்தது. ஆனால், இம்முறை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நகர அபிவிருத்தி அதிகார சபையினரும் தற்காலிக கடைகள் அமைத்து குத்தகைக்கு கொடுத்தனர். இதனால் மாநகர சபைக்கு கிடைக்கும் வருமானமும் இல்லாமல் போயுள்ளது. எனவே எதிர்வரும் வருடங்களில் இடையூறு செய்யாமல் வசந்த கால நிகழ்வுகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *