பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

thinu.jpgதிருமலையில் சிறுமி வர்ஷா கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டதும் பின்னர் படுகொலை செய்யப்பட்டதும் இப்போது மட்டக்களப்பில் சிறுமி தனுசிகா கடத்தப்பட்டதும் கப்பம்  பின்னர் படுகொலை செய்யப்பட்தும் அருவருக்கத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

இவ்வாறான சம்பவங்கள் எமது மக்கள் மத்தியில் ஒருவகைப் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி வர்ஷாவின் படுகொலையோடாவது முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டிய இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதானது மக்களின் பாதுகாப்பு அமைதி மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாகவே இருக்கின்றது.

கொலை கொள்ளை கப்பம் கோருதல் தொடர்பாக பல முறைப்பாடுகள் தொடர்பில் எமது கண்டனத்தையும், உரிய நடவடிக்கையையும் நாம் கோரியிருந்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த அசமந்தமான போக்கே மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் தொடர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

புலிப் பயங்கரவாதம் போல் இவ்வாறான சமூக விரோதிகளின் செயற்பாடுகளும் எமது மக்களின் நிம்மதியான, அமைதியான வாழ்வுக்கும்  பிள்ளைகளின் சுமூகமான கல்விச் செயற்பாட்டுக்கும் தடையாகவே இருக்கின்றது. எனவே சமூக விரோதிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் தாமதத்தையும் நியாயமற்ற காரணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போல் குடும்ப உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்புத் தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் எமது மக்கள் வாழுகின்ற கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

இதே வேளை பாடசாலை சிறுவர்களான ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன் (13 வயது) வள்ளுவன் ஜீவகுமார் ஆகிய சிறுவர்களும் கடத்தப்பட்டிருப்பதாக அறிகின்றோம். இவர்கள் கவனமாக காப்பாற்றப்பட  வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் இயல்புச் சூழலைக் குழப்பியிருக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

ஊடகச் செயலாளர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி)

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *