கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா எதிர்வரும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
விசேடமாக, இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்கு கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அமைச்சர் சந்திரசேகரைச் சந்திக்கிறார். இதேநேரம், கடற்றொழில் மற்றும் கடல்சார் ஆய்வுகள் குறித்தும் இந்தியாவுடன் கூட்டுச் செயற்பாடுகளில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர தமிழ்தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவிடம் பேசியதும் இல்லை அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சமும் முன்னெடுத்தது இல்லை. இந்தியா தமிழருக்கு தீர்வு வழங்க வேண்டும் – இலங்கை தமிழருக்கு இந்தியா தான் உற்ற நண்பன் என கூறி இந்தியாவின் காலில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்தேசியம் பேசும் தலைவர்கள் எவருமே வடக்கு மீனவர்கள் பிரச்சினை பற்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது. இந்த நிலையில் கடந்த காலங்களில் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இந்த தமிழ்தேசிய தரப்பு எந்த ஒத்துழைப்பையும் வழங்கியது கிடையாது. இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் தமிழ்தேசிய தலைமைகள் ஒத்துழைப்பு வழக்கம்போவதில்லை என்பது கண்கூடு. இதேவேளை அமைச்சர் சந்திரசேகர் , அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என்று அறிவித்துள்ள நிலையில் இந்தியத்தூதுவருடனான இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.