தொடரும் இனப்படுகொலை – இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் படுகொலை செய்கிறது என சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தனர். இப்போரில் இதுவரை 44,600பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளதாக சர்வதேச சேவை அமைப்புகள் அறிவித்துள்ளன. இதேவேளை பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் அமைப்பு (Committee to Protect Journalists ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 180க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அதிகமானோர் பாலஸ்தீனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் இன அழிப்பில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபை அமைப்பினுடைய விரிவான அறிக்கையில் ,
“ இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் நடத்தும் தாக்குதலை ஆய்வு செய்ததில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இன அழிப்பில் ஈடுபடுவது தெரியவருகிறது. இது சர்வதேச சமுதாயத்துக்கு ஓர் எச்சரிக்கை மணியாகும். இந்த இன இழிப்பு இப்போதே தடுத்து நிறுத்தப்படவேண்டும். இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாதுதான். அதே போல், காஸாவில் பொதுமக்களிடையே ஆயுதக் குழுவினர் கலந்திருப்பதையும் மறுப்பதிற்கில்லை. ஆனால், அந்தப் பகுதியில் இஸ்ரேல் நடத்திவருவது இன அழிப்பே ஆகும். இந்தக் குற்றத்துக்கு அமெரிக்காவும் இஸ்ரேலின் பிற நட்பு நாடுகளும் துணை போவதாகவே கருத முடியும். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சர்வதேச மன்னிப்பு சபைய் இந்த ஆய்வறிக்கை உண்மைகளைத் திரித்து பொய்யாகப் புனையப்பட்டது என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.