இன்றைய செய்திகள்: 06.12.2024
‘ஊத்திக்கொள்ள பார்பெர்மிட் போர்த்திக்கொள்ள தமிழ் தேசியம்’ பொறியில் சிக்கிய எலி யார்..? அடம்பிடிக்கும் சாணக்கியம்
வடக்கு – கிழக்கு தமிழ் தேசிய பா உ கள் தமிழ் இனவாதிகள்! வன்னியில் மலையக மாவீரர்கள் புறக்கணிப்பு! பா உ கிட்டிணன் செல்வராஜ்
1. வடக்கு – கிழக்கு தமிழ் தேசிய பா உ கள் தமிழ் இனவாதிகள்! வன்னியில் மலையக மாவீரர்கள் புறக்கணிப்பு! பா உ கிட்டிணன் செல்வராஜ்
வைத்தியர் அர்ச்சுனா தனது பாராளுமன்ற முதல் உரையில் விடுதலைப் புலிகள் தலைவர், ஜேவிபி தலைவர், ஈழப்போரில் உயிர் நீத்த போராளிகள், ஜேவிபி தோழர்கள் என ஒரு பட்டியலை வாசித்து அகவணக்கம் செய்திருந்தார். சர்ச்சை ஊசி; அருச்சுனாவின் ஸ்ரன்டுகளில் இதுவும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அப்படியிருக்க தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவருமான கிட்டிணன் செல்வராஜ் வன்னியில் மறக்கப்பட்ட மலையக மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக தன்னுடைய பாராளுமன்ற முதல் உரையில் குரல் கொடுத்தார்:
1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சியானால் திட்டமிட்ட ரீதியில் பிராஜாவுரிமை பறிக்கப்பட்டு மலையகத் தமிழ்மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். 1956 களில் இதன் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக்கட்சி முடுக்கிவிட்ட இனக்கலவரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட மலையக தமிழ்மக்கள் றெட்பானா பின் காந்தியம் அமைப்பினூடாக வன்னி மற்றும் கிளிநொச்சி பிராந்தியகளிலும் எல்லைப்புறக் கிராமங்களிலும் குடியேற்றப்பட்டார்கள். பிற்காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர்களிடையே ஈழவாத அரசியல் தலை தூக்கிய போது அந்த கருத்தியலுக்கு வலு சேர்க்கும் வகையில் மலையக தமிழ் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராடினார்கள். ஆனால் வன்னியில் உள்ள மலையக மக்கள் யுத்தத்திற்குப் பின் கறிக்கு கருவேற்பிலையாக தூக்கி எறியப்பட்டார்கள். இதனையே கிட்டிணன் செல்வராஜ் தனது பாராளுமன்ற உரையில் சுட்டிக்காட்டி இருந்தார்.
“வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், அதனூடான தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒட்டுமொத்த மக்களின் நலனையும், வாழ்வியலையும் மேம்படுத்த தேசிய மக்கள் சக்தி கடமைப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் காணி உரிமையை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகைள முன்னெடுப்போம்” என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தனது உரையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் அவர் உரையாற்றும் போதே கிட்டிணன் செல்வராஜ் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
” கிட்டிணனுடைய வார்த்தைகளை ஓர் பாராளுமன்ற உறுப்பினரின் வார்த்தைகளாக கடந்து செல்ல முடியாது. அது 200 ஆண்டு கால மலையகத் தமிழரின் வலிகளை சொல்லும் ஓர் கதை. அது ஈழத்தமிழர் தம்முள் இருக்கும் இன்னுமொரு மக்கள் கூட்டத்தை அரசியல் அநாதைகளாக கைவிட்ட கதை’ என ஓர் சமூக ஆர்வலர் தன் பேஸ்புக் வலைத்தள கணக்கில் கருத்து பகிர்ந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வனுக்கு மொழிபெயர்பாளராகக் கடமையாற்றிய சமூக செயற்பாட்டாளர் பொன்னையா சுப்பிரமணியன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில், முஸ்லீம் மக்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது போல் மலையக மக்களையும் வடக்கிலிருந்து வெளியேற்றும் ஒரு திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். மலையகத் தமிழர்கள் சரளமாக சிங்கள மொழியையும் பேசக்கூடியவர்களாக இருந்ததால் அரசுக்கு தகவல்கள் வழங்குகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மலையகத் தமிழர்களையும் வெளியேற்ற புலிகள் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
2. ‘கஜா – சிறி வாத்தி நீங்களெல்லம் எலிக்குஞ்சுகள் புலிக்குட்டியைப் பாருங்கள்’ ஊசி அர்ச்சுனா – “பனை மரத்தில வெளவாலா…”
பாராளுமன்றத்தில் ஊசி அர்ச்சுனாவின் கன்னி உரை 04.12.2024 அன்று ஆற்றப்பட்டது. அதில் மருத்துவ மாபியா தொடர்பான விடயங்களையும் அதற்கு எதிராக தான் போராடியது பற்றியதும் சிறை சென்றது பற்றியும் பேசுவார் என்று பார்த்தால் வழமையான தூண்டிவிடும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் போல தலைவருக்கு வணக்கம், மாவீரர்களுக்கு வீரவணக்கம் என்றும் முழங்கித் தள்ளினார். ஏற்கனவே தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை புலிகள் பாணியில் துரோகி முத்திரை குத்திச் செல்லும் ஊசி அர்ச்சுனா மாவீரர்கள் பற்றியும் புலம்பெயர் தேசத்து முதலீடுகள் பற்றியும் பேசியதன் மூலம் புலம்பெயர் புலிக்குட்டிகளை உசுப்பி விட்டு அதன் மூலம் தனது பொக்கெட்டினை நிரப்ப போகிறார் என ஊசி எதிர்ப்பு குழுவினர் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இதேவேளை ஊசி அர்ச்சுனாவின் மொழிப்புலமை அவரை ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவதனை குறிப்பிட்டு பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
3. இனவாதத்தை தூண்டியதற்காக ராஜபக்சக்களின் சகாக்கள் மீதும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ந்தது!
ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளருமான ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவும் – இனவாத கருத்துக்களை தூண்டியமைக்காகவும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ச்சியாக இனவாதமில்லாத ஓர் நாடு என்ற தொனிப்பொருளில் இயங்கிவருவதை தனித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் காட்டி வருகின்றது. பெரும்பாலும் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் சிறுபான்மை இனங்களின் மீது மட்டுமே கடந்த அரசாங்க காலங்களில் பிரயோகிக்கப்பட்டு வந்ததுடன் தென்னிலங்கை அரசியல்வாதிகளோ அல்லது பிரஜைகளோ இனவாத கருத்துக்களை முன்வைத்த போது அதுசார்ந்த கைதுகள் இடம்பெறுவதில்லை. பொலிஸாரும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டனர்.
இந்த நிலையில் முதன்முறையாக பயங்கரவாத கருத்துக்களை முன்வைத்தவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தென்னிலங்கையிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் தென்னிலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களே இனவாத கருத்துக்களை எதிர்ப்பது, தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை சிறுபான்மை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராஜபக்ஷ தரப்பை சேர்ந்த பிரதான நபர் கைது செய்யப்பட்டு உள்ளமையானது இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
4. ‘ஊத்திக்கொள்ள பார்பெர்மிட் போர்த்திக்கொள்ள தமிழ் தேசியம்’ பொறியில் சிக்கிய எலி யார்..? அடம்பிடிக்கும் சாணக்கியம்
மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார். யாரையோ அம்பலப்படுத்தி அம்மணமாக விடவேண்டும் என்பதில் சாணக்கியன் சாணக்கியமாக காய் நகர்த்துகின்றார். “அண்மையில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டன. எனினும் அதற்குப் பின்னால் உள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும். எனவும் கிளிநொச்சி பார்பெர்மிட் தொகையை மேற்கோள் காட்டியும் இரா சாணக்கியன் மறுபடியும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியது பார்பெர்மிட் எனும் எலிப்பொறியில் சிக்கிய அந்த எலி யார் என்ற கேள்வியை தமிழ் அரசியல் பரப்பில் மீள எழுப்பியுள்ளது.
ஏற்கனவே சூசகமாக பாராளுமன்ற தேர்தல் காலத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் “ஊத்திக் கொள்ள பார் பெர்மிட் – போர்த்திக்கொள்ள தமிழ்தேசியம்” என பேஸ்புக் பதிவில் எழுதியிருந்ததை தொடர்ந்து தமிழ் அரசியல் பரப்பில் யார் அந்த பார் பெர்மிட் எடுத்த தமிழ்தேசிய அரசியல்வாதி என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பார்பெர்மிட் அலையில் அடிபட்டு காணாமல் போயினர். இதன்போது சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டு அவருடைய அரசியல் எதிரியாக பார்க்கப்பட்ட சிறீதரன் எம்.பி பக்கம் திரும்பியது. இருந்தாலும் சிறீதரன் எம்.பி பொலிஸ் வழக்கு, தன் தரப்பு ஆதரவாளர்கள் மூலமான பிரச்சாரம் மூலம் அந்த அலையை சமாளித்திருந்தார்.
5. மதுவரி அனுமதிப் பத்திரங்களை சும்மா தூக்கிக் கொடுக்காதீர்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு !
ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பட்டியல் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் 361 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 172 பேர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்டவை எனவும் புதிதாக வேறு மதுபான சாலை அனுமதி வழங்குவதை நிறுத்திவைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையில் நல்லபிப்பிராயம் கிடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான வகையில் அந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
6. மென்டிஸ் அன்ட் கம்பெனியின் உரிமம் இடைநிறுத்தம் !
டிசம்பர் 05 திகதி முதல் மென்டிஸ் அன்ட் கம்பனியின் மதுபான உரிமைத்தை உடனடியாக அமுலுக்கு வரும்படியாக இடைநிறுத்தி வைப்பதற்கான ஆணையை சிறிலங்கா மதுவரித் திணைக்கள ஆணையாளர் வழங்கியுள்ளார். மென்டிஸ் நிறுவனமானது மாதாந்தம் செலுத்த வேண்டிய வருமானவரியை செலுத்த தவறியமையே இந்த அனுமதி இரத்துக்குக் காரணமாக கூறப்படுகின்றது. நிலுவைத் தொகை மற்றும் தண்டப்பணமான மேலதிக கட்டணங்கள் செலுத்தப்படாவிடில் இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் ஆண்டுக்கு மேல் மென்டிஸ் கம்பனியின் அனைத்து உரிமங்களும் முழுமையாக இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊழலை முடிவுக்கு கொண்டுவரும் தேசிய மக்கள் சக்தியின் இலக்குகளில் ஒன்றே அரசாங்கத்திற்கு முறையாக வரி செலுத்தாது கல்லா கொடுப்பவர்களுக்கு பாடம் புகட்டுவதே.
7. பெண்கள் அதிகாரத்திற்கு வருகின்றனர்! பொறுப்பான பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர்!
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக இமேஷா முத்துமாலை, பொலிஸ் களப்படைத்தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக தர்ஷிகா குமாரி, பொலிஸ் விஷேட புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளராக லங்கா ரஜினி அமரசேனவும் நியமனம் பெற்றுள்ளனர். மேலும் காவல்துறை மருத்துவ சேவைகள் பிரிவின் இயக்குநராக ஒரு மூத்த பெண் காவலதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு பதவியுயர்வு பெற்ற பெண் அதிகாரிகள் நான்கு பேரும் நீண்டகாலம் இலங்கை பொலிஸில் பணியாற்றிய அனுபவமுடையவர்கள். இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் நிலவுகின்ற பல்வேறுவகையான சமூகப், பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுடன் சேர்ந்து பெண்களும் சிறுவர்களும் பாலின சமத்துவமின்மையின் எதிர்மறையான விளைவுகளை தொடர்ந்தும் அனுபவித்து வருகின்றனர்.
பெண்கள் அதிகாரத்திற்கு வருவதில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்தனர். இதிலிருந்து மாறுபட்டு இலங்கையை ஆளும் தேசியமக்கள் சக்தி அரசாங்கம் தன்னை முற்போக்கான அரசாங்கமாகவும் நிரூபித்து வருகின்றது.
8. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவியாக சரோஜா சாவித்திரி போல்ராஜ்
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 19 பெண் உறுப்பினர்கள் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மலையகத்திலும் மாத்தறையிலிருந்துமே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் குடும்ப அரசியல் பின்னணி இல்லாமல் பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை தெற்காசியாவிலே சிறந்த முன்மாதிரியாக கருதப்படுகிறது.
30 ஆண்டுகள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது அதற்குப் பின் அவர்களைத் துதி பாடி அரசியல் செய்கின்ற தமிழ் தேசியமோ பெண்களை கருவேற்பிலைகளாகவே பயன்படுத்தி தூக்கி எறிந்து வந்தனர். இந்தப் பின்னணியிலிருந்து இன்னமும் தமிழ் சமூகம் விடுபடவில்லை. ஆனால் தெற்கில் நிலைமை மிகவேகமாக மாறிவருகின்றது. அந்த மாற்றத்துக்கு தோளோடு தோள் நின்றவர்கள் அதன் பலனை சமூகத்திற்கு வழங்குகின்றனர்.
நாட்டின் பிரதமர் கதிரையை ஹரிணி அமரசூரிய என்ற சிறந்த கல்வியலாளர் அலங்கரிக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான சரோஜா சாவித்ரி போல்ராஜ் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன வழிமொழிந்தார். மேலும் பெண்கள் பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களும் இதன் போது தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த ஹரிணி அமரசூரிய, பொதுமக்களின் வாக்குகளால் குறிப்பிடத்தக்கவீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டமை சிறந்த வெற்றி எனவும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த ஒன்றியம் செயற்பட்டு அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்குவதே இந்த ஒன்றியத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
தேசியப்பட்டியலில் கூட ஒரு பெண்ணை தெரிவு செய்ய வக்கில்லாத மேட்டுக்குடி ஆணாதிக்கவாதிகளாகவே வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க்கட்சிகள் காணப்படுகின்றனர். இது தமிழ்மக்களை பொறுத்தவரை ஒரு இழி நிலையே ஆகும். 30 வருட யுத்தத்தில் ஆயுதம் ஏந்திய பெண்கள். யுத்த முடிவில் தமது சுயமரியாதையை இழந்து முடக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க்கட்சிகளும் தேசிய மக்கள் சக்தியிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
9. கனடாவுக்கு செல்லவுள்ளோருக்கு செக் வைத்த கனடா – சுற்றுலா விசாவில் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர் !
அண்மைய காலங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கனடா நோக்கி விசிட் விசாவில் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுதாண்டி கனடா மோகம் தமிழர் பகுதிகளில் உள்ள மாணவர்கள் இடையே ஆழமாக ஊடுருவியுள்ளதை சர்வசாதாரணமாக அவதானிக்க முடிவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி மீதான ஆர்வம் மிக பின்தங்கிய நிலையை அடைந்துள்ளதாகவும் கல்வியாளர்கள் பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கனடாக் கனவை வளர்த்துள்ள பல இலங்கை வாழ் தமிழர்களுக்கு இடியாய் ஓர் செய்தியை கனேடிய அரசு வெளியிட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் புலம்பெயர்வோரையும், அகதிகளையும் பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கும் நாடாக இருந்துவரும் கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.
சமீப வருடங்களில் கனடா வாழ் உறவினர்களின் சுற்றுலா அழைப்பிதழை பயன்படுத்தி பெருந்தொகை பணத்தையும் வங்கில் பிணையாக இட்டுக்காட்டி கனடாவிற்கு குடும்பமாகவும் தனியாகவும் வடக்கில் கிழக்கில் இருந்த சென்ற தமிழர்கள் நாடு திரும்பும் நிர்ப்பந்தமும் தற்போது ஏற்பட்டுள்ளது.
கனடாவின் குடிவரவுத்துறை அமைச்சர் மார்க் மில்லர் கூற்றின்படி 2025 வருட இறுதிக்குள் கனடாவில் தற்காலிக அனுமதியுடன் புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டி வரும் என்கிறார். ஏனெனில் தற்காலிக அனுமதி அதாவது சுற்றுலா விசா போன்றவற்றுடன் கனடாவில் குடிபுகுந்தவர்களின் பல மில்லியன் அனுமதிகள் காலாவதியாகியமையே காரணமாகும்.
விசா முடிவடைந்ததும் அவர்கள் தாமாகவே கனடாவை விட்டு வெளியேறுவார்கள் என மார்க் மில்லர் கூறுகிறார். எவ்வாறெனினும் கிட்டத்தட்ட 4.9 மில்லியன் பேரின் தற்காலிக அனுமதி முடிவடையவுள்ள நிலமையில் அவர்கள் தாமாகவே வெளியேறுவதை கனடா அரசு எப்படி உறுதி செய்யும் என கொன்சேர்வேட்டிவ் கட்சி எம்பி ரொம் சந்தேகமாக கேட்கின்றார். அதற்கு பதிலளித்த மில்லர் கனடாவிற்கு தற்காலிக விசாவில் வந்தவர்களுக்கு விசா முடிந்தும் கனடாவில் தங்க உரிமையில்லை எனவும் அவர்கள் வெளியேற மறுக்கும் பட்சத்தில் அவர்களை வெளியேற்றும் உரிமை கனடா எல்லை பாதுகாப்பு முகவர்களுக்கு உண்டு எனவும் எச்சரிக்கின்றார்.
வடக்கு கிழக்கில் வினைத்திறனான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு கைத்தொழில் துறை, விவசாயம் என்பன வளர்ச்சியடைந்திருந்தால் சாரை சாரையாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்கள் நாட்டை விட்டு வெளியேற முற்பட மாட்டார்கள். ஏமாற்று முகவர்களிடம் சிக்கி ஐரோப்பிய போர் முனைகளிலும் மாட்டுப்பட்டிருக்க மாட்டார்கள். இந்நிலமைக்கு போலித் தமிழ்த்தேசியம் பேசி மக்கள் வாக்கை பெற்று பாராளுமன்றம் சென்றவுடன் அவர்களை கைகழுவிய தமிழ்க்கட்சிகளே பொறுப்பாளிகளாகும்.
10. செல்வாக்கு இழந்துவரும் கஜா அணி சைக்கிளோடி மன்னார் சென்று செல்வத்தாரோடு கூட்டமைக்க முயற்சி!
தேர்தலுக்குப் பின் செல்வாக்கு இழந்துவரும் கஜா அணிக்கு இருப்புக்கான ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீண்டகாலம் யாழ் ஊடக மையத்திற்குப் போகாமல் முரண்டு பண்ணியவர்கள் தேர்தலுக்கு முன்னரேயே ஊடக மையத்திற்குப் போகவேண்டியதாகிவிட்டது. கொள்கைப் புலிகள் என்று வீரம்பேசி வந்தவர்கள் தேர்தலுக்குப் பின் சிறி வாத்தியிடம் சென்று அவரின் இல்லத்தில் சந்தித்தனர். இப்போது தங்களுடைய சாதிய பிரதேசவாதத் பணக்காரத் திமிர்களை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு மன்னாருக்கு சைக்கிள் ஓட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. செல்வத்தாரை மன்னாருக்குப் போய் பார்க்கும் ஒரே தலைவர் கஜா என்ற பெயர் வரலாற்றில் இடம்பெறும். அதில் செல்வத்தாருக்கு ஒரு கிலு கிலுப்பு இல்லாமலில்லை. கஜா கஜா இவ்வளவு கீழிறங்குவதற்குக் காரணம் யூலி சங் போட்ட மந்திரம் என தமிழ் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
மேலும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அனுரா அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், கஜா கஜா இதனை ஒரு அரசியலாக்கி சர்வதேச தலையீட்டைக் கொண்டு வருவது, இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கும் அரசியல் கைதிகளை தொடர்ந்தும், சிறையில் வைத்திருக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. மிகப் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி, விளம்பரப்படுத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணாமல் தமிழ் மக்களுடைய காணி விடுவிப்பு, இராணுவ முகாம்களை நீக்குவது, பாதைகள் விடுவிப்பு என்பனவற்றை கச்சிதமாகச் செய்து வருகின்றது. அந்த வகையில் அரசியல் கைதிகளது விடுதலையும் காலக் கிரமத்தில் நடக்கும்.
சுர்வதேசத்தை கொண்டுவந்து படம்காட்டுகிறேன் என சர்வதேசத்தைக் கொண்டு அரசியல் கைதிகள் விடுதலையை சர்வதேசப் பிரச்சினையாக்கி அதனை சிங்கள பேரினவாதிகளது கையில் கொண்டுபோய் சேர்ப்பதற்கான வேலையை கஜா கஜா அணி கச்சிதமாக மேற்கொண்டுள்ளது. இது அரசியல் கைதிகளது விடுதலையை இன்னும் காலத்துக்கு தள்ளிச்செல்லவே வழிவகுக்கும் எனச் சிலர் கருதுகின்றனர்.