பௌத்த பிக்குவின் பூதவுடலை சுமந்து சென்ற முஸ்லீம்கள் – சிலாகித்து பேசும் சிங்கள ஊடகங்கள்!
கேகாலையில் முஸ்லிம் மக்கள் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
காலஞ்சென்ற கனேகந்த ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் பரதெனியே சந்தரதன தேரரின் இறுதி சடங்கு முஸ்லிம் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னத்தோட்டையில் வாழும் முஸ்லிம் மக்களுடன் மிகவும் கண்ணியமான முறையில் வாழ்ந்த தேரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள தமது வர்த்தக நிலையங்களை மூடி, தேரருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சுலைமானியா மைதானத்தில் இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்ற நிலையில், தேரரின் சடலத்தை முஸ்லிம் மக்கள் சுமந்து சென்றுள்ளனர். சமூகங்களுக்கிடையில் பிணைப்பைக் கட்டியெழுப்பும் வகையில் அறநெறியில் ஈடுபட்ட தேரர் தனது 69ஆவது வயதில் கடந்த நான்காம் திகதி காலமானார்.
சிங்கள இனத்தை சேர்ந்த தேரருக்கு முஸ்ஸிம் மக்களால் வழங்கப்பட்ட நல்லிணக்கம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகம் சிலாகித்து பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.