தேசிய இனப்பிரச்சனை தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளை சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (07) மாலை இடம்பெற்றது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் தமிழர் தரப்பின் நிலைப்பாடு தொடர்பிலும், புதிய அரசாங்கத்துடன் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் சுவிஸ் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி செயலாளரும், சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவருமான ரிம் எண்டர்லின், இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிரி வோல்ற், இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் மனிதப் பாதுகாப்பிற்கான முதன்மைச் செயலாளர் ஜெஸ்ரின் பொய்லற், சுவிஸ் தூதரகத்தின் மூத்த தேசிய திட்ட அதிகாரி சுசந்தி கோபாலகிருஸ்ணன் உள்ளடங்கிய குழுவினர் தமழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினர்.
இதில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், ப.சத்தியலிங்கம், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.