இன்று சர்வதேச மனித உரிமை தினம்!
இன்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் தினம். ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் திகதி மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சமத்துவம், நீதி, தன்னுணர்வின் முக்கியத்துவத்தை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வலியுறுத்துவதற்கான நாள் இதுவென ஐக்கியநாடுகள் சபை குறிப்பிடுகின்றது. ‘எங்களுடைய உரிமைகள், எங்களுடைய எதிர்காலம், இப்பவே வேண்டும்’ என்ற கருத்தியலோடு இவ்வாண்டு மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
ஆனால் மனித உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காத யுத்தங்களுக்கு மனித உரிமைகாவலர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட மேற்குலகம் உலகை வழிநடத்துகின்றது. உக்ரைன், நோட்டோ – ரஷ்ய யுத்தம், காஸா, லெபனான் – இஸ்ரேல், அமெரிக்க யுத்தம். சிரியாவில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடரும் பதட்டம் வேறொரு அரசியல் திருப்பு முனையில் வந்து நிற்கின்றது.
ஒப்பீட்டளவில் இலங்கை ஒரு அமைதிச் சூழலுக்குள் திரும்பியுள்ளது. வன்முறைகளற்ற தேர்தல். இனவாதத்துக்கு எதிரான கருத்துருவாக்கம் என்பன இலங்கையில் நம்பிக்கை துளிர்விடுவதைக் காணக்குடியதாக உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இருந்தாலும் தீர்க்கப்படாத தொடரும் பிரச்சினைகளும் உள்ளது. அது அண்மைய எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
“தமிழர்களுக்கு மாகாண சபை தவிர்ந்த ஒரு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் புறம்பான ஒரு தீர்வை நோக்கி என்பிபி – ஜேவிபி போகின்றது. நாங்கள் தமிழர்கள். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் இலங்கை மக்கள் அனைவரும் சரி சமமமானவர்கள் என்ற ரீதியிலான அதிகாரப்பரவலாக்கத்தை நோக்கியே அவர்கள் நகர உள்ளனர்” என்கிறார் ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற இறுதி யுத்தம் தொடர்பான நூலின் ஆசிரியர் த ஜெயபாலன். “எப்போதும் தாங்கள் சரிசமமாக நடத்தப்படுவார்கள் என்கின்ற பட்சத்தில், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவானால் கணிசமான தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள்” என்றும் அந்நிலையை உருவாக்குவதும் அதனை சட்டபூர்வமாக உறுதிப்படுத்துவதும் தேசிய மக்கள் சக்தியின் கைகளில் உள்ளது எனவும் த ஜெயபாலன் தெரிவித்தார்.
மனித உரிமைகளில் மிக முக்கியமானது உயிர்வாழ்வதற்கான உரிமை. இந்த யுத்தங்களை ஆதரிப்பவர்களும் யுத்தங்களுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகித்து உயிர்வாழ்வதற்கான உரிமையை இல்லாமல் செய்பவர்கள் மனித உரிமைகள் பற்றிக் கதைக்க தகுதியற்றவர்கள் எனவும் நூலாசிரினர் த ஜெயபாலன் தெரிவித்தார். இதனை காஸாவிலும் லெபனானிலும் பார்க்கின்றோம். உக்ரைன் யுத்தமும் சாட்சியாகின்றது.