2009 இறுதி யுத்தமும் மனித உரிமைகளும் த ஜெயபாலனின் மனித உரிமைகள் தினக் குறிப்பு:
இலங்கையின் 2009 இறுதி யுத்தம் இவ்வளவு அழிவுகளுக்குச் சென்றிருக்க வேண்டியதில்லை. மாவிலாறு மூடப்பட்டது முதல் பெப்ரவரி 2009 வரையான காலத்தில் ஆயிரம் பேர்வரையே கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்தள்ளினர். ‘பனை மரத்தில், வெளவாளா தலைவருக்கே சவ்வாலா’ என்பவர்கள் தற்போது மனித உரிமைகள் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள். பெரும் தொகையில் தமிழர்கள் பலிகொடுக்கபட்டால் சர்வதேசம் இராணுவத்தை இறக்கி தங்களைக் காப்பாற்றி தமிழீழம் பெற்றுத் தருவார்கள் என புலம்பெயர் தமிழர்களில் கணிசமானவர்கள் சிந்தித்தனர். அவ்வாறே செயற்பட்டனர். அன்றைய கொசோவோ போல் தாங்களும் அங்கிகரிக்கப்படுவார்கள் என இவர்கள் கனவு கண்டனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்தக் கனவுக்கு தாயகத் தமிழர்கள் கொடுத்த விலை மிக அதிகம்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவை நம்பி அழிக்கப்பட்டது தான் பெரும்பாலான உயிரிழப்புகள். 2006இல் யுத்தத்திற்குச் சென்றது மிகப்பெரும் அரசியல் முட்டாள்தனம். அவ்வளவு தோல்விகளுக்குப் பின் 2009 பெப்ரவரியில் ஆயுதங்களை ஒப்படைத்து அரசியல் நீரோட்டத்திற்கு வருமாறு சர்வதேசம் அழைப்பு விடுத்தது. அன்று அதனைச் செய்திருந்தால், பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். மக்கள் உயிருக்காகப் போராட்டிக் கொண்டிருக்கும் போது மனித உரிமை பற்றிக் கதைக்காமல். பலிகொடுத்துவிட்டு மனித உரிமை பற்றி கூக்குரலிடுவதில் எவ்வித பலனும் இல்லை.
எதிர்காலத்திலாவது பலிகொடுத்துவிட்டு மனித உரிமைப் போராட்டம் நடத்தலாம், பழிவாங்கலாம் என்ற உலுத்துப்போன சிந்தனையோடு அரசியல் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உயிர்கள் கொல்லப்படாமலிருக்க மனித உரிமைப் போராட்டம் நடத்த வேண்டும்.
சகமனிதர்களை மனிதாபிமானமாக நடத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். மனித உரிமைகளை வலியுறுத்தும் பலர், இன்றும் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி மௌனமாகவே உள்ளனர். எம்மோடு வாழும் சக மக்களை கீழானவர்களாக கருதுகின்ற மதிக்கின்ற போக்கு இன்னமும் தாயகத்திலும் புலம்பெயர் மண்ணிலும் உள்ளது. இவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்துவிட்டு மனித உரிமைகள் பற்றிப் பேசினால் அதில் ஒரு தார்மீக நியாயம் இருக்கும். யாரும் கொல்லப்படாமலிருக்க, ஒடுக்கப்படாமலிருக்க மனித உரிமைகளைக் கோருவோம். பழிவாங்கலுக்கு அல்ல. காஸாவிலும் லெபனானிலும் இனப்படுகொலை செய்யும் சர்வதேசத்திடம் மனித உரிமை நியாயம் கேட்பது மிக இழிவான செயல்.