யார் இந்த தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த வெள்ளைச்சீலைக்காரிகள்..? மலையகத் தமிழர்களால் ஏன் யாழ்ப்பாணத்தில் ஒட்டியிருக்க முடியவில்லை..?
தமிழ்க்கவி இன்றைய ஈழத்து தமிழர் தம் இலக்கிய பரப்பில் செயற்பாட்டு நிலையில் உள்ள மூத்த எழுத்தாளர் என்பதற்கு அப்பால் இரத்தமும் சதையுமாக போராட்டத்தின் ஆரம்ப புள்ளி தொடங்கி அதன் முடிவுப் புள்ளி வரையான பக்கங்களை அதன் உள்ளிருந்து பார்த்த ஓர் தாய். இந்த நிலத்துக்கான போராட்டத்திற்காக தன் பிள்ளைகளை இழந்த ஓர் மாவீரர் குடும்பத்தின்தாய் என்பதுடன் முன்னாள் போராளியும் கூட. அவருடனான தேசம் திரை நேர்காணல் மிக முக்கியமான புள்ளிகளை தொட்டு ஊடாடுகின்றது. மலையக தமிழர்களை எல்லைப்பாதுகாவலுக்காக சிறுதுண்டு நிலத்தை வழங்கிவிட்டு ஏமாற்றிய தமிழ்தலைமைகள் பற்றியும், தமிழர்கள் 1950 ற்கு முன்பு வாழ்ந்த நிலத்துடன் இணைந்த வாழ்க்கை பற்றியும், வெள்ளைச்சீலைக்காரிகள் என்போரை தமிழகமும் தொடர்ந்து யாழ்ப்பாணமும் துரத்தி விட்ட வரலாறு பற்றியும் , மலையக தமிழர்களை ஏன் கிளிநொச்சி நிலம் மட்டுமே ஆதரித்தது என்பது பற்றியும், ஈழத்து இலக்கிய பரப்பில் எழுத்தாளர்களின் இன்றைய நிலை தொடர்பிலும் , இயற்கையை தொலைக்க முதல் தமிழனின் வாழ்வியல் – இன்று இயற்கையை தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வியல் பற்றியும் மிக்க தெளிவான வரலாற்று மற்றும் நடைமுறை உரையாடலாக இந்த நேர்காணல் நிற்கிறது. இந்த நேர்காணலின் போது தமிழ்க்கவி அவர்களுடைய அடுத்த படைப்பை தேசம் பதிப்பகம் வெளியீடு செய்யும் என தேசம் ஜெயபாலன் உறுதியளித்துள்ளமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது..!