கனடா மோகத்தால் தொடரும் கொள்ளைகள்!
கனடாவிற்கு அனுப்புவதாக 1 கோடி 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.
ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை 16 பேரிடம் பணம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடா செல்வதற்காக பல லட்சம் பணத்தை பணமாற்று முகவரிடம் பெற்றுத் திரும்பிய இளைஞர் வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டசம்பவம் இவ்வாண்டு ஓகஸ்டில் இடம்பெற்றது தெரிந்ததே.