இலங்கை சிறார்களின் ஆபாசமான காணொளிகள் இணையத்தில் – விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை சிறார்களின் ஆபாசமான காணொளிகள் இணையத்தில் – விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை சிறார்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் சிலர் வெளியிடுவதாக அமெரிக்க நிறுவனமான “நெக்மேக்” வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட “நெக்மாக்” என்ற இந்த இணையத்தள நிறுவனம் உலகின் எட்டு நாடுகளுடன் இணைந்துள்ளதாக நீதிமன்றத்தின் முன் பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் உறுப்புரிமை பெற்ற நாடுகளில் சிறுவர்கள் தொடர்பான ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்படுவது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேடுதலின் போது, ​​ இலங்கைச் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் கணனி சாதனத்தின் ஊடாக வெளியிடப்பட்டிருப்பதை அந்த நிறுவனத்தின் நெக்மேக் செயலி ஊடாக கண்டறிந்து அது குறித்து இலங்கைக்கு அறிவித்ததாக பணியகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இச்சம்பவம் போன்ற பல முறைப்பாடுகள் தற்போது வரை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதாக பணியகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

பல முறைப்பாடுகள் கிடைத்து வருகின்ற போதிலும் இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை என பணியகம் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சிலர் தமது கையடக்கத் தொலைபேசியில் தரவிறக்கம் செய்து சமூக ஊடகங்கள் ஊடாக அந்த ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பரப்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக பணியகம் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, டெலிகிராம் செயலியில் ஆபாசமான காணொளிகளைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை பயமுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மேலதிக வகுப்பு மாணவர்களைக் கொண்ட டெலிகிராம் குழுக்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *