பாராளுமன்ற உறுப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யும் ஊசி அர்ச்சுனா! யாழ் போதனா வைத்தியசாலையில் சாதியத் திமிர்!

கனடா மோகத்தால் தொடரும் கொள்ளைகள்!

பாராளுமன்ற உறுப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யும் ஊசி அர்ச்சுனா! யாழ் போதனா வைத்தியசாலையில் சாதியத் திமிர்!

 

1. கனடா மோகத்தால் தொடரும் கொள்ளைகள்!

கனடாவிற்கு அனுப்புவதாக 1 கோடி 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.

 

ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை 16 பேரிடம் பணம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கனடா செல்வதற்காக பல லட்சம் பணத்தை பணமாற்று முகவரிடம் பெற்றுத் திரும்பிய இளைஞர் வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டசம்பவம் இவ்வாண்டு ஓகஸ்டில் இடம்பெற்றது தெரிந்ததே.

 

2. பாராளுமன்ற உறுப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யும் ஊசி அர்ச்சுனா! யாழ் போதனா வைத்தியசாலையில் சாதியத் திமிர்!

 

மலையகம் 200 ஆண்டு கடந்த பின்னும் சாதியத் திமிரோடு திறந்திருந்த வைத்தியசாலைக்குள் நுழைந்து ‘சேர்’ என்று அழைக்கும்படி பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூரத்தியிடம் குலைத்தார் ஊசி அர்ச்சுனா, ஊசி அர்ச்சுனாவின் உயர்வுச் சிக்கல் மிகக் கீழ்த்தரமாகிக் கொண்டு செல்கின்றது. என்னை ‘சேர்’ என்று கூப்பிட வேணும், ‘நீர் எனக்குக் கீழ்’, ‘நான் கேட்கிறதுக்கு பதில் சொல்ல வேணும்’ என்றெல்லாம் ஊசி அர்ச்சுனா குலைத்ததும் இவ்வாறே குலைத்து வருவதும் அவரது சாதிய, பிரதேச வாதத் திமிரையும் மிடுக்கையும் காட்டுவதாகவே இருந்தது.

 

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரதன்னை ‘சேர்’ என அழைக்குமாறு கூறி தர்க்கம் செய்துள்ளார் ஊசி அர்ச்சுனா என வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ். போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி ஊசி அர்ச்சுனாவை எச்சரித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், ‘சேர் ‘ என்று அழைக்க முடியாது என்று பதிலளித்ததற்கு, என்னை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், பாராளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் அர்ச்சுனா மிரட்டியதாக கூறினார் சத்தியமூர்த்தி.

 

டொக்டர் பிரணவனுக்கும் அர்ச்சுனாவுக்கும் நடந்த உரையாடலில் பிரணவன் தன்னை சேர் என்று அழைக்குமாறு ஊசி அர்ச்சுனாவுடன் முரண்டுபிடித்த ஒலிப்பதிவை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். ஊசி அர்ச்சனா தற்போது தன்னை ‘சேர்’ என்று அழைக்கும்படி தன்னுடைய சாதியத் திமிரை வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கு நாடுகளில் உத்தியோகத்தர்களை இவ்வாறு மிரட்டியிருந்தால் அப்பாராளுமன்ற உறுப்பினர் உறுப்புரிமையை ராஜினாமாச் செய்யும் அளவுக்கு அழுத்தங்கள் அதிகரித்திருக்கும். இந்த சாதியத் திமிருக்கு தனக்கு பாதுகாப்புக்கு துப்பாக்கி தரப்படவில்லை என்று வேறு இவர் புலம்புகின்றார். இவருக்கு அப்படித் துப்பாக்கி வழங்கப்டுவதாக இருந்தால் இவருடைய மனநிலையை பரிசோதித்து உறுதிப்படுத்திய பின்னரே அதனை வழங்க வேண்டும் என்கிறனர் இவருடைய சகாக்கள்.

 

3. ‘’தொடுக்கப்பட்ட ஊழல் வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன்?’’ ஜனாதிபதி அனுர

 

69 தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில் 40 வழக்குகள் மீளப்பெறப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி அனுரா. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற 2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கேள்வியை எழுப்பினார். 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஊழல் வழக்குகள் மீளப் பெறப்பட்டமைக்கான காரணம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

ஒரு வருடமொன்றில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர். அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

4. அமெரிக்கா: அதானி வரிசையில் இரண்டு முன்னாள் இலங்கை அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் ஶ்ரீ லங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இருவரும் கடுமையான ஊழல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது. அத்துடன் ஒரு படி மேலே போய் இவ்விரு அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவுக்கான பயணத்தடையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விதித்துள்ளது.

 

உதய வீரதுங்க இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது ஊழல் நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுத்ததாகவும், கபில சந்திரசேன ஶ்ரீ லங்கன் எயர்லைன்சின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிய போது இலங்கை எயர்பஸ்ஸை அதிக விலைகொடுத்து வாங்குவதற்காக இலஞ்சம் வாங்கியதாகவும் அமெரிக்கா குற்றஞ் சாட்டுகிறது.

 

சமீபத்தில் அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய அமெரிக்கா அதானி மற்றும் அவரது மருமகனையும் நேரடியாக அமெரிக்காவிற்கு வந்து விளக்கம் அளிக்கும்படி அழைப்பாணையும் அனுப்பியுள்ளது. அமெரிக்க இராஜங்க திணைக்களம் மேலும் கூறியுள்ளதாவது. ஊழலிற்கெதிரான சர்வதேச தினம் மற்றும் சர்வதேச மனித உரிமைதினத்தை முன்னிட்டு உலகில் ஊழல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படும் வகையில் அமெரிக்கா காத்திரமான நடவடிக்கையை எடுப்பதாக குறிப்பிட்டது.

 

ஹாசாவில் 65,000 பேருக்கு மேல் அப்பாவி மக்கள் இஸ்ரேலினால் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னரும் கூட இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இஸ்ரேல் லெபனான் மீது மேற்கொண்டு வரும் தாக்குதலையும் கண்டிக்கவில்லை. இஸ்ரேலின் நடப்பு அதிபர் நெத்தன்யாகு உள்நாட்டில் பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்பவர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் இனப்படுகொலை குற்றத்திற்காக சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர். இதுவரை அமெரிக்கா தன்னுடைய நெருங்கிய நண்பனுக்கெதிராக ஊழல் குற்றத்திற்காக பயணத்தடையும் விதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நெத்தன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசை பாதுகாத்தும் வருகிறது.

 

 

5. கனடாவில் தமிழ் துப்பாக்கித் தம்பதிகள் கைது!

 

இளம் தமிழ்த் தம்பதியொன்று இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ரொறன்டோ ஸ்காபுரோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன் மீது 8 குற்றச்சாட்டுகளும் மனைவி மீது 3 குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 3 திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது இந்த தம்பதிகள் சிக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

கொழும்பிலிருந்து யாழுக்கு சொகுசு காரில் வந்து கொள்ளையிட்டுச் செல்லும் தம்பதிகளைப் பொலிஸார் தேடிவருகின்றமையை தேசம்நெற் நேற்றைய செய்தியில் வெளியிட்டு இருந்தது. கணவன் மாட்டிக்கொண்டார். மனைவி தப்பித்துக்கொண்டார்.

 

இதேபோன்று இரண்டு வருடங்களுக்கு முன்னரும் துப்பாக்கிககள் வைத்திருப்போர் தொடர்பான விசாரணைகளின் போது பிரம்டனில் இரண்டு சகோதரர்கள் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் மற்றும் 30 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக பெறப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

 

புலம்பெயர் நாடுகளில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளையோர் இடையே பெருகிக் கொண்டுவரும் வன்முறைக் குற்றங்கள் தொடர்பில் புலர்பெயர் தமிழ் அமைப்புக்கள் காத்திரமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் மேற்கு நாடுகளை நோக்கி புலம்பெயரத்தொடங்கிய காலந்தொட்டு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே வன்முறை குழுக்கள் செயற்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அக் குழுக்கள் நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஆயுத அமைப்புக்களின் நீட்சியாகவே இருந்தன.

 

ஆனால் தற்போது புலம் பெயர் தமிழ்மக்களிடையே புலம்பெயர் நாடுகளிடையே காணப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக் குழுக்கள் பெரும்பாலும் இரண்டாம் தலைமுறையை உள்ளடக்கியதாக உள்ளன. இவ்வாறான குழுக்கள் கனடா மற்றும் பிரான்ஸில் அதீத செல்வாக்குடையனவாக காணப்படுகின்றன. அது மட்டுமல்ல நாட்டில் போராட்டத்தின் முடிவின் பின் வெடித்த வாள் வெட்டுக்குழுக்கள் குறிப்பாக ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்கள் புலம் வரை தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அந்தவகையில் கடந்த வாரம் லார்க்கூனேயில் 1995இல் பிறந்த

ஒரு தமிழ் இளைஞன் சிவராஜா தனுசன் கலிபர் வகை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

6. தராக்கி சிவராமின கொலையாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள்! கொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

 

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில், இலங்கையில் யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தராக்கி சிவராமின் கொலை தொடர்பில் புளொட் சம்பந்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் பா உ தர்மலிங்கம் சித்தார்த்தன் விசாரணைக்குட்படுத்தாலாம் எனவும் தெரியவருகின்றது.

 

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அல்ல. சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன்னிக்கிறது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பல உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

7. கலாநிதிகளும் கல்லாநிதிகளும் இலங்கைப் பாராளுமன்றத்திலும் சர்ச்சை

 

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக சபுமல் ரன்வலயின் கலாநிதிப் பட்டம் தொடர்பில் சர்ச்சை வலுப்பட ஆரம்பித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவும் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித் தகமையை நிரூபிக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார். அவ்வாறு நிரூபிக்கத் தவறினால் அவர் பதவி விலகவேண்டும் அல்லது என்.பி.பி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறான கல்லாநிதிகளின் கலாநிதிப்பட்டம் மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் கௌரவப்பட்டங்கள் வழங்குகிறோம் என்ற பெயரில் ஒரு நூறுபவுண்களுக்கே பட்டத்தை வழங்குகின்றன. லண்டனில் நடைபெற்ற இவ்வாறான பட்டமளிப்பை லண்டன் வெஸ்மினிஸ்ரர் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை தேசம்நெற் அம்பலப்படுத்தி அந்நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது. ஆனாலும் அதன் பின்னர் அப்பட்டமளிப்பு நிகழ்வு இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. யாழ் பல்கலைக்கழககத்தின் கலைப்பிரிவில் உள்ள கலாநிதிகள் பெரும்பாலும் கள்ளநிதிகளே. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் குதிரையோடிப் பெற்ற பட்டங்களே.

 

அசோக சபுமல் ரன்வலவுக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் இல்லை என சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியதையடுத்து நாடாளுமன்ற இணையத்தளத்தில் அசோக சபுமல் ரன்வலயின் பெயருக்கு முன்னாலிருந்த டாக்டர் பட்டம் நீக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் மேலும் சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. இதேவேளை விக்கிப்பீடியாவிலும் அவரது கல்வித் தகைமைகள் தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவரது டாக்டர் பட்டம் நீக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் போலிக் கல்வித் தகைமைகளின் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக பணம் கொடுத்து பட்டங்கள் வாங்குதல், அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழகங்களிடம் பட்டம் பெறுதல், கௌரவ கலாநிதிகள் எனும் பெயரில் போலிக் கலாநிதிப் பட்டங்களை பெயருக்கு பின்னால் பயன்படுத்தல் போன்றன இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

8. மீண்டும் துவங்கிய இடத்துக்கே ரிஎன்ஏக்கு வருவோம் – ரெலோ செல்வம்!

 

இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையில் நாம் தமிழ்தேசிய கூட்டமைப்பாக ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றைப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில், “பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எமது பாராளுமன்றக் குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனின் கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இதுவரை இல்லை. ரெலோ குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி சங்கு அரியத்தாரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தினர். ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும் அடைக்கலநாதனின் கட்சியில் இருந்த வினோநோகரலிங்கம் குறித்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு தங்களுடைய நலன்களுக்காக அடைக்கலநாதன் உள்ளிட்டோர் வெளியேறிய போதும் கூட தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தேர்தல் நிலவரங்களை அவதானித்து இணைவதற்காக இவர்களுக்கான கால அவகாசகத்தை வழங்கிய போதும் கூட அரியத்தாருக்கு கிடைத்த இரண்டு லட்சம் ஓட்டுக்களின் வீரியத்தை கூறி சுயலாப அரசியலால் இணைவதற்கு தயாராகவில்லை. முடிவில் சங்கு சின்னம் அடிவாங்கியதுடன் வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஆகக்குறைவான வாக்குகளை பெற்றது வரலாறாகிவிட்டது.

 

இதேவேளை கூட்டமைப்பை முதன்முதலில் உடைத்து துண்டாடிய பொன்னம்பலம் கஜேந்திரகுமார்; இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். சிறிதரனும் – கஜேந்திரகுமாரும் ஏற்கனவே சிறிதரனின் இல்லத்தில் சந்தித்துவிட்டனர். தற்போது கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஒற்றுமை வேள்விக்கு புத்தளத்தில் ஒரு வயோதிப மாதுவை பலிகொடுத்தாச்சு. இனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கி யூலி சங்குடன் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுவது தான் பாக்கி.

 

9. உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி அனுரவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் அழைப்பு!

 

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்றுமாறு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் இலங்கைக்கான தூதுவர், சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அரசாங்கங்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருந்ததாகவும், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் குறித்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி உரையாற்றுவதை தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரவின் டிஜிற்றல் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கின்ற வகையில் இந்த அழைப்பு அமைந்துள்ளது.

 

அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையென்று, ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி முhயடநன யேளளநச யுடயுஅநசi தெரிவித்தார். இது விடயத்தில் இலங்கையுடன் தமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள ஐக்கிய அரபு இராச்சியம் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார். சபாநாயகர் (கலாநிதி) அசோக ரன்வலவை நேற்று (டிசம்பர் 09)மரியாதையின் நிமித்தம் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். மேலும், வெளிப்படையான மற்றும் ஈர்க்கக்கூடிய முதலீட்டு நடைமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தொழில்துறை சார்ந்தவர்களாகவும், அமைதியான சமூகத்தினராகவும் வாழ்வது தொடர்பில் நன்மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைகளை முன்னேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது. முதலீடுகளை விஸ்தரிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

 

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீளவும் ஸ்தாபித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

 

 

10. உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்! வலிந்து காணாமலாக்கப்பட்டோரை போராடி மீண்டெழ வைக்க முடியாது!

 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

அண்மையில் இந்த அமைப்புகள் தாங்கள் உள்ளக பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சர்வதேசம் தான் தங்களுக்கு நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். அதே சமயம் சர்வதேசம் தங்களை கண்டுகொள்வதில்லை என்றும் தங்கடைய மன வருத்தத்தை வெளியிட்டனர்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தம் அவர்களை வைத்து அரசியல் செய்வது மிகமோசமான அரசியல்” என முன்னாள் போராளியும் மாவீரர்களின் தாயுமான தமிழ்கவி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தன்னுடைய பிள்ளையும்தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது எனத் தெரிவித்த தமிழ்கவி “அவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை” என்பது அந்த உறவுகள் அனைவருக்கும் தெரியும். இதனை அரசியலாக்குபவர்களிடம் நான் செல்வதில்லை” என்றும் தெரிவித்தார்.

 

தமிழ்கவியுடைய கருத்தை வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் மனைவி அனந்தி சசிதரனும் தெரிவிக்கின்றார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்பு பலவாகச் சிதைவுண்டு பலராலும் இயக்கப்படுகிறது. சர்வதேச நாடுகளும் இவர்களை நேரடியாகவும் இயக்குவதாக அவர் தெரிவித்தார். இப்ப நடப்பது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை வைத்து செய்கின்ற அரசியல் வியாபாரம் என்றும் அனந்தி சசிதரன் குற்றம்சாட்டியிருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *