இலங்கையனும் இல்லை இந்தியனும் இல்லை – மண்டியிட்டு கதறிய யாழ் இளைஞர்
தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் முழங்காலில் இருந்து கதறிய யாழ்ப்பாண இளைஞன். இலங்கையில் யுத்தம் நடந்த போது ஜோய் கே என்றழைக்கப்படும் இவ் இளைஞன் 8 வயதில் பெற்றோரால் படகு மூலம் தமிழ்நாடு அனுப்பிக்க வைக்கப்பட்டுள்ளார். மண்டபம் வந்தடைந்த ஜோய் அங்கே இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்கு இதுவரை இந்திய அரசாங்கத்தினுடைய எந்தவித அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
தற்போது 22 வருடங்கள் கடந்த நிலையில் சாதாரண வாழ்க்கை நடத்துவதற்கு கூட உரிய அடையாள ஆவணங்கள் வழங்கப்படாததால் தனது பெற்றோர் வசிக்கும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் அந்த இளைஞர் இதுவரை தான் 10க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்டச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்டச் செயலக அதிகாரி தன்னை இலங்கைக்கு அனுப்ப மறுப்பதாகவும், தன்னை இந்தியக் குடிமகனாக அங்கீகரித்து எந்த ஆவணமும் வழங்கவில்லை என்று தன்னை சமாதனப்படுத்த முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் முறையிட்டார். இவ்வாறு இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து அகதியாக சென்ற இலங்கைத் தமிழ்மக்கள் 3 தலைமுறை கடந்தும் இரண்டாம் தர பிரஜைகளாகவே தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறார்கள். அடிப்படை வசதிகள் குறைந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வாங்கிக் கொடுத்தே தீருவேன் என பிழைப்பு அரசியல் நடத்தும் சீமானும் தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளை கண்டுகொள்ளவில்லை.
இந்திய மத்திய அரசாங்கம் திபேத் அகதிகளுக்கு வழங்கி வரும் ஆதரவை அங்கீfhuத்தை இலங்கை அகதிகளுக்கு வழங்கவில்லை. இந்தியா இலங்கைத் தமிழருக்கு தீர்வு பெற்றுத்தரும் என நப்பாசையில் இருக்கும் தீவிர தமிழத் தேசியம் பேசும் கட்சிகளும் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
அப்படியிருக்க ‘எக்ஸ்’ தளத்தில் வெளியாகிய குறித்த காணொலியை பகிர்ந்து கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கை அரசு இந்திய அரசுடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த இளைஞனை இலங்கைக்கு அழைத்து வந்து அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போரின் விளைவுகளால் இனி எந்த ஒரு இளைஞர் வாழ்க்கையும் எதிர்காலKம் மறுக்கப்படக்கூடாது. தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாமல் கூட வேதம் ஓதும் போது இலங்கைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக காட்டிக்கொள்ளும் நடப்பு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நித்திரையில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே கடற்தொழில் அமைச்சரை சந்தித்ததாக இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயம் தனது எக்ஸ் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளது. இச்சந்திப்பில் மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் எனப் பேசப்பட்டதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர டிசம்பர் 15இல் டெல்லி செல்ல உள்ளார். அப்போதும் இப்பிரச்சினை பேசப்பட்டு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என கடற்தொழிலாளர் சங்கம் கோரிக்கைவிட்டுள்ளது.