யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு மாணவிகள் முகங்கொடுக்கின்றனர் – துணைவேந்தர் சி சற்குணராஜா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு மாணவிகள் முகங்கொடுக்கின்றனர் என துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சி சிறிசற்குணராஜா சில ஆண்டுகளுக்கு முன் புதிய மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பற்றிக் குறிப்பிடும் போது, ‘மாணவிகள் இவர்கள் சொக்லேட் தந்து கூப்பிடுவார்கள், நம்பிப் போய்விடாதீர்கள்’ என்ற கருத்துப்பட குறிப்பிட்டிருந்தார். அதனையே அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் டிசம்பர் 11ஆம் திகதி நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பால்நிலை வன்முறைகள் பல்கலைக்கழகங்களிலும் தலைதூக்கியுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 67சதவீதமான மாணவர்கள் பெண்கள். அவர்களுக்கும் பல்வேறுவிதமான பிரச்சினைகள் உள்ளன. சில விரிவுரையாளர்கள் இரவு நேரங்களில் அவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இது சிக்கலான ஒரு பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சி சிறிசற்குணராஜா சொல்கின்றார்:
“பால்நிலையை முதன்மைப்படுத்துவதற்கான பல்துறைசார்ந்த மற்றும் ஒன்றிணைந்த முன்னோக்குகள்” என்ற தொனிப் பொருளுடன் நடைபெற்ற “வியோமம்” சர்வதேச ஆய்வு மாநாட்டில் பால்நிலை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பால்நிலை வன்முறை குறித்த 56 உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள், வன்முறைகளால் பெண்கள் தொடர்ந்தும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். ஆயினும் அவை தொடர்பான முறையான விசாரணைகளோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளோ இடம்பெறுவதில்லை. 67 சதவீதமான பெண் மாணவிகளையும் அதிகப்படியான பெண் விரிவுரையாளர்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.
ஆனாலும் பல்கலைக்கழகத்தில் செல்வாக்கு செலுத்துவோராக பாலியல் சுரண்டலில் ஈடுபடும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினருமே உள்ளனர். பாலியல் ரீதியிலான பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள் அவற்றை வெளிப்படுத்துவதற்கு அல்லது நீதிகோருவதற்கு நம்பிக்கையான பொறிமுறை பல்கலைக்கழகத்தில் இல்லை. மேலும் பெரும்பாலான பெண் விரிவுரையாளர்கள் இவ்வாறான பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதிபெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அவற்றை மூடிமறைப்பவர்களாகவே உள்ளனர். அல்லது அவற்றை எதிர்த்து போராடுவதற்குத் திராணியற்றவர்களாக உள்ளனர். இவையெல்லாம் இவ்வாறான பாலியல் குற்றவாளிகள் நல்லவர்கள், வல்லவர்கள் என்ற வேடத்தில் உலாவுவதற்கு காரணமாக அமைகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள் தம் வாழ்நாள் வடுவாக இவற்றை சுமக்க நேரிடுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெறுமனே சம்பிரதாயத்துக்காகவும் அரசாங்கத்தின் கட்டாயத்துக்காகவும் மட்டும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தக்கூடாது. மாறாக இவ்வாறான பிரச்சினைகளை சமூகப் பொறுப்போடு அணுகி உரிய பொறிமுறைகளை உருவாக்கி பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக பல்கலைக்கழகத்தை மாற்ற முன்வர வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் குற்றிப்பாக கலைப்பிரிவில் மிக மோசமான பாலியல் சுரண்டல்கள் நடைபெற்று வருவதை கடந்த 15 ஆண்டுகளாக தேசம்நெற் அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.