. ‘தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் புதிய தீர்வு புகுவதும் பழைய தீர்வு – மாகாண சபை 13வது திருத்தம் கழிவதும் இயல்பானது!’ ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா
“அதிகாரப் பரவலாக்கத்தை மக்களுக்குக் கிட்டவாக கீழ் மட்டம்வரை கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். தமிழ் மக்களோடு கலந்துரையாடி தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வு வரும்வரை மாகாணசபை இயங்கும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட புதிய தீர்வு வந்தால் பழையது இல்லாமல் போகும் தானே” என ஜேவிப் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஹிசாம்ஸ் இன்சைட் என்ற சிங்கள காணொலிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். “இனவாதம், மதவாதம் மிகவும் ஆபத்தானது அதனை இல்லாமல் செய்ய, அதனை எதிர்கொள்ள சட்டம் முழுவீச்சுடன், அதன் உச்ச பலத்துடன் பிரயோகிக்கப்படும்” என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்த ஜேவிபின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அதனால் தான் ‘இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சமூகவலைப் பதிவுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக நடவடிக்கை எடுத்தோம்’ எனத் தெரிவித்தார். ‘இந்த இனவாதம், மதவாம் என்பது கொலைகளிலும் மோசமானது எனத் தெரிவித்த அவர் அதனை முளையிலேயே கிள்ளியெறியாவிட்டால் கடந்த காலங்களில் இலங்கையில் நடந்தது போலாகி விடும். நாங்கள் தூரநோக்கோடு இந்த நாட்டை இனவாதம், மதவாதம் இல்லாமல் கட்டி எழுப்புகின்றோம். அதனைப் பலவீனப்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம்’ என்றார் ரில்வின் சில்வா.
“தமிழ் ஊடகங்கள் நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை நாங்கள் சொன்னதன் உள்ளடக்கத்துக்குப் புறம்பாகத் திரித்து வெளியிட்டு வருகின்றனர்” எனவும் ரில்வின் சில்வா தனது நேர்காணலில் குற்றம்சாட்டியிருந்தார். “எங்களுக்கு வாக்களித்த மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள், சிங்கள மக்கள் எங்களைப் புரிந்துகொள்கிறார்கள்” எனத் தெரிவித்த ரில்வின் சில்வா, எங்களுடைய வெற்றியை விரும்பாத சிலர், இவ்வாறு உண்மையில்லாத விடயங்களைப் பரப்புகின்றனர் எனத் தெரிவித்தார். வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான ரில்வின் சில்வாவின் பேட்டி தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனை ரில்வின் சில்வாவே தன்னுடைய மொழியில் தெரிவிக்கின்றார்:
நேர்காணலை மேற்கொண்டவர், “நீங்கள் ஒரு நீண்ட காலப் போராளி, கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலம் இருக்கின்றீர்கள். தற்போது உங்களுடைய கட்சி மிகப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. நீங்கள் ஏன் பாராளுமன்றம் செல்லவில்லை, அமைச்சராகவில்லை” எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த ரில்வின் சில்வா, “எனக்கு கட்சிக்குள் பெரிய பொறுப்புகள் இருக்கின்றது, அனுர தோழரின் பொறுப்பு ஜனாதிபதியாக நாட்டை கொண்டு நடத்துவது, பாராளுமன்ற பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைச் செய்கின்றார்கள். நான் மட்டும்மல்ல உங்களுக்கு யார் என்று கூடத் தெரியாத பெரும் தொகையானவர்கள் மாவட்டங்களிலும் கிராம மட்டங்களிலும் சந்தோசமாக தங்கள் கடமையைச் செய்து வருகின்றார்கள். பாராளுமன்றம் வந்துதான் அதனைச் செய்ய வேண்டும் என்று யாரும் கருதவில்லை. தேசிய மக்கள் சக்தி புதிய அரசியல் கலாச்சாரத்தை கொண்டுவந்துள்ளது. எங்கள் கட்சியில் யாரும் அமைச்சுப் பதவி கேட்கவில்லை. தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் செல்லவும் கேட்டகவில்லை” எனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.