ஐஎம்எப் கடன் பிரச்சினையில் கரணம் தப்பினால் மரணம் !
ஐஎம்எப் இன் கடன் மீள்வரைவு நிபந்தனைகளை இலங்கை அரசு எதிர்த்து இருக்க வேண்டும் என ASATIC அமைப்பின் செயலாளர் ரவி சுந்தரலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இலங்கை கடன்களை மீனளித்துவிட்டது. இப்போது இவர்கள் வட்டிக்கு வட்டியும் வட்டி குட்டி போடுவதையும் கேட்கின்றார்கள். இலங்கை மக்களை கசக்கிப் பிழிந்து இந்தக் கடனைச் செலுத்த அவசியமில்லை . இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு இந்த மகத்தான ஆணையைக் கொடுத்தது இதற்காககவல்ல. இன்னும் இரு ஆண்டுகளில் கடன்களை மீளக் கட்ட வேண்டிய நேரம் வருகின்ற போது மக்கள் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரலாம் என அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் ஐஎம்எப் தனது வட்டியையையும் குட்டியையும் வசூலிக்க முற்பட்ட போது இலங்கையின் ஜனாதிபதிகள் மக்கள் மீது சுமையை ஏற்றினர். அதனால் பதவியை இழந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிர்தலிங்கம், எழுபத்து ஏழுக்களில் மிகப்பெரும் கடன்சுமையோடு ஆட்சிக்கு வந்த ஜேஆர் ஜெயவர்த்தன அரசியலில் சிக்கலானவராக இருந்தாலும் பொருளாதாரத்தில் வெற்றியைக் கண்டதாக பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்றுள்ள நாடு ஜேஆர் ஜெயவர்த்தனா பொறுப்பேற்றிருந்த நாட்டிலும் மோசமான நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதற்கு தற்போதைய அரசு எவ்விதத்திலும் காரணமில்லை என்றாலும் இதனை சரிவரக் கையாள வேண்டிய பொறுப்பு ஜேவிபிக்கு உள்ளது என்றும் கரணம் தப்பினால் மரணம் என்பதாகவும் கோடிட்டுக்காட்டினார். மக்களை வருத்தி இந்தக் கடன்களை மீளக் கட்டமுடியாது என்ற நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி – ஜேவிபி அறிவித்திருக்க வேண்டும் என்கிறார் கொமிற்றி போர் வேர்கர்ஸ் இன்ரநஷனலின் சர்வதேசச் செயலாளர் சேனன். அவர் மேலும் குறிப்பிடுகையில் தாங்கள் அரகலையப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே இதனைச் சொல்லி வருவதாகவும் ஜேவிபி ஒரு மார்க்ஸிய சிந்தனையுடைய அமைப்பு இல்லாததால் அவர்களும் முதலாளித்துவ மனப்பான்மையுடனேயே செயற்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். இது பற்றி ஜேவிபி க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கையில் வெளியில் இருந்து கருத்துக்களை முன்வைப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து முடிவுகளை எடுப்பதற்கும் இடையே பாரிய இடைவெளி இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர். நாங்கள் மக்களையும் நோகடிக்காமல் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைத்து நாட்டின் பிரச்சினையில் இருந்து மீள்வோம் என்று நம்பிக்கை வெளியிட்டனர் .