யார் அங்கே ? மாவை எங்கே ? அவர் உள்ளேயா ? வெளியேயா ? – பாவம் தமிழரசுக் கட்சி : சுமந்திரன் பீலிங்ஸ்
பாராளுமன்ற தேர்தலுக்கு பின் டிசம்பர் 14 இல் வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குழாய் அடிச்சண்டை. 10 மணிக்கு வர வேண்டிய பதவி விலகிய மாவை சேனாதிராஜா வரத் தாமதித்தே இந்த வாய்க்கால் சண்டைக்கு காரணம். பதவி விலகியவர் கூட்டத்தை தலைமைதாங்க முடியாது. தாமதியாமல் கூட்டத்தை தொடங்கும்படி செயலாளரை கிழக்கின் தமிழ்த்தேசியத் தலைவர் இரா சாணக்கியன் தூண்ட அதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். மாவைக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கூட்டத்திற்கு அழையுங்கள் என சிவமோகனும் இடையில் குறுக்கிட்ட சாணக்கியன் ” இது கோல் சென்ரர் அல்ல , கட்சி … ‘ உங்கள் வைத்தியசாலை இதுவல்ல என்று பதிலளித்தார் . இப்படியே உறுப்பினர்களிடையே வார்த்தைகள் தடிக்க சாணக்கியனுக்கு வக்காலத்திற்கு வந்த பீற்றர் இளஞ்செழியனும் சிரேஷ்ட உபதலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்துங்கள் அல்லது குழப்பவாதிகளை வெளியேற்ற வேண்டும் என உறுமினார் . இதற்கிடையில் விடாப்பிடியாக நின்ற சிவமோகனை நாற்காலி அருகில் சமாதானப்படுத்த முயன்ற சுமந்திரனின் இராஜதந்திரமும் தோற்றுப்போனது . வென்றது என்னவோ மாவை தான் . அடித்துப்பிடித்து ஒருவழியாக 10:45 கூட்டத்திற்கு வந்து சேர்ந்த மாவை குடுகுடு என்று ஓடிப்போய் முன்வரிசையில் தலைவர் இருக்கையில் இடத்தைப் பிடித்துக் கொண்டார் . இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக விவாதிக்க இக் கூட்டம் நடைபெற்றது . ஓக்டோபரில் மாவை பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் . அது தொடர்பில் கட்சி செயலாளர் விளக்கத்தை கேட்ட போது மாவை உடனடியாகப் பதில் வழங்கவில்லை . அதனைத் தொடர்ந்து செயலாளர் , மாவையின் பதவி விலகல் நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார். இதற்கிடையில் சிறிதரன் ஊடாக மாவை கையொப்பமிட்ட பதவி விலகலை மீளப்பெறும் கடிதமொன்று செயலாளரிடம் ஒப்படைத்திருந்தார் . மறுநாள் மாவையும் நேரடியாக குறிப்பிட்ட கடிதத்தை செயலாளருக்கு அனுப்பியிருந்தார் . இந்த இழுபறிக்குள் கட்சியின் அடுத்த மாநாடு வரைக்குமான எஞ்சிய காலப்பகுதிக்கு தமிழரசுக்கட்சியின் யாப்பின் பிரகாரம் சி.வி. கே . சிவஞானம் தலைவராக முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டார் . இதற்கு போட்டியாக மாவை பதவி விலகலை மீளப்பெற்றதால் அவர் தொடர்ந்தும் தலைவராக இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது , யார் தலைவர் ? என்ற கேள்விக்கு விவாதங்களுாடாக பதில் கிடைக்கவில்லை . அதனால் மாவையின் பதவிவிலகலை ஏற்றுக்கொண்ட தரப்பு இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விட அழைப்பு விடுத்தது . எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் டிசம்பர் 28 இல் வாக்கெடுப்பிற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .