அரச வேலையே வேண்டும் – கலைப்பட்டதாரிகள் விடாப்பிடி : இவர்கள் வரிச்சுமையை கூட்டப் போகின்றனர் – மக்கள் விசனம்

அரச வேலையே வேண்டும் – கலைப்பட்டதாரிகள் விடாப்பிடி : இவர்கள் வரிச்சுமையை கூட்டப் போகின்றனர் – மக்கள் விசனம்

தனியார் வேலையோ அல்லது சுயதொழிலோ எமக்கு வேண்டாம்.  அரசாங்க நியமனங்களை அரசு தமக்கு வழங்கியே ஆகவேண்டும் என வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேவேளை இத்தனை வருடங்கள் தம்முடைய வரிப்பணத்தில் இலவசக் கல்வியில் படித்துவிட்டு 5 வருடங்களாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்காமல் வீட்டில் இருந்துகொண்டு மேலும் தம் வரிச்சுமையை கூட்டுவதற்கு அரச வேலை கேட்டு போராட்டம் நடத்துகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது மாவட்ட செயலகத்தின் முன்பு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை. புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.  இதில் கலந்துகொண்டிருந்தோரில் மிகப்பெரும்பாலோனோர் கலைப்பீட பட்டதாரிகளாகவே காணப்பட்டனர்.  அவர்களிடம் பல்கலைக்கழக கல்வி தொடர்பான போதிய புரிதலோ அல்லது அதன் நோக்கம் பற்றிய தெளிவையோ காண முடியவில்லை.

பாடசாலைக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையான தம்முடைய கல்வியின் நோக்கம் அரச வேலைக்கானது என்பதே அவர்களுடைய எண்ணமாக உள்ளமையை அவதானிக்க முடிந்தது. அரசவேலையற்ற கல்வி வீணானது என்ற கருத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர். வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா அரசாங்கம் வேலைதராது என்றும், போராடுவது வீண் என்றும் – ஏதாவது திட்டங்களை தொடங்கி வேலை கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அத்தோடு நின்று விடாமல் மாவட்டத்திற்கு ஒரு குறைகாண் அதிகாரிகளை நியமித்து பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தப் போவதாகவும் அவர்களுக்கான சம்பளத்தை புலம்பெயர் தமிழர்கள் பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் முகநூலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற பெயரில் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்காமல் பெரும்சுமையாக ஒருதொகை அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்ற நிலையில் குறைகேள் அதிகாரிகள் எனும் பெயரில் பட்டதாரிகளை நியமித்து அந்தச் சுமையை புலம்பெயர் தமிழர்களின் தலையில் கட்டுவதற்கு அர்ச்சுனா தயாராகிவிட்டார்.  நாடு எதிர்நோக்கியுள்ள பெரும் பொருளாதார சரிவுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று அரசசேவைகளில் தேவைக்கு அதிகமானோர் உள்ளீர்க்கப்பட்டமை என்பது வெளிப்படையானது.

பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதும் கடந்த கால அரசாங்கங்கள் வாக்கு வங்கிக்கான கருவியாக அரச நியமனங்களை பயன்படுத்தியுள்ளன என்பதும் மிகத் தெளிவாக பேசப்பட்டு வருகின்றது . அவ்வாறான நிலையில் பட்டதாரிகளின் இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியையும் அவர்களின் தகமை தொடர்பில் கேள்விகளையும் எழுப்பியுள்ளன . பட்டதாரிகளின் இந்த நிலைக்கு அவர்கள் மட்டுமல்லாது இலங்கையின் கல்வி முறையிலுள்ள குறைபாடும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குறிப்பாக கலைப்பீடத்தின் வினைத்திறனற்ற செயற்பாடுகளும் பயனற்ற கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளர்களின் ஆட்சேர்ப்பும் முக்கிய காரணங்களாகும் . இலங்கையில் வேலைவாய்ப்புகள் தாராளமாக உள்ளபோதும் அவற்றுற்குரிய தகமைகள் கலைப்பீட பட்டதாரிகளிடம் போதுமானதாக இல்லை. சந்தையில் இருக்கும் கேள்விகளுக்கு ஏற்ப தம்மை வளர்த்துக்கொள்ளும் ஆர்வமும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை . தற்போதைய அரசாங்கம் டிஜிட்டல்மயமாக்கத்தை நோக்கி நாட்டை நகர்த்த ஆரம்பித்துள்ளது.  அதற்கான ஆளணிப் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஆனால் இவற்றுக்கு பொருத்தமானவர்களாக கலைப் பட்டதாரிகள் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.  அரசாங்க வேலை இல்லாமையால் தங்களுடைய காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது என்று பட்டதாரிகள் புலம்புகின்றார்கள் . உண்மையில் இவர்கள் இந்த நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயன்கொடுப்பார்கள் என்று நம்பி மக்களுடைய வரிப்பணத்தில் இவர்களுடைய இலவசக் கல்விக்காக இறைக்கப்பட்ட பெருமளவு முதலீட்டை 5 வருடங்களாக வீட்டிலிருந்து இவர்கள் வீணடிக்கின்றனர் என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.  பல்கலைக்கழகத்தில் பெறப்படும் கல்வியின் நோக்கம் துறைசர்ந்த திறமைகளைப் பெறுவதோடு , புதியதொரு பார்வையை உருவாக்கி . தனிமனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் பங்களிக்க முடியுமாறு ஒருவரை தயாரிப்பதாகும்.அதைவிடுத்து மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு மீண்டும் அரச வேலை எனும் பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் நாட்டுக்கும் சமூகத்துக்கும் முன்னேற்றகரமான முயற்சிகளை நோக்கி இவர்கள் நகரவேண்டும் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *