அரசு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பணத்தை டொலர் கையிருப்பாக மாற்ற வேண்டும்!

அரசு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பணத்தை டொலர் கையிருப்பாக மாற்ற வேண்டும்!
வெளிநாடுகளில் குறிப்பாக மேற்குலகில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தை அந்நியச் செலவாணியாகப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசியல் பொருளியல்  ஆய்வாளர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். இதனை மாற்றி அமைப்பது பற்றி பிரதி வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கவனமெடுத்து இதற்கான பொறிமுறையை உருவாக்கி அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிக்க முயலவேண்டுமென அவர் தெரிவிக்கின்றார்.
இதன் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தற்போது ஈட்டித்தருகின்ற ஆறு பில்லியன் டொலர் அந்நியச் செலாவணியிலும் பார்க்க அதிகமான டொலர் வருமானத்தை இலங்கை அரசு ஈட்டலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
தற்போது புலம்பெயர்ந்த தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் அனைவருமே பெரும்பாலும் உண்டியல் முறைமையூடாகவே தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு பணத்தை அனுப்புகின்றனர். இம்முறையினூடாக அந்நிய நிதி இலங்கையின் வங்கிகளுக்கு வருவதில்லை. குறித்த பணம் அனுப்பும் நாட்டில் உள்ளவர், அங்குள்ள நிதி நிறுவனத்தை அணுகி குறித்த அனுப்ப வேண்டிய பணத்தை பெற்றுக்கொண்டு இலங்கையில் உள்ள முகவருக்கு இவ்வளவு தொகை ரூபாயை இலங்கையில் உள்ள பெற்றுக்கொள்ள வேண்டியவரின் வங்கிக் கணக்கில் வைப்பிட தகவல் அனுப்புவார். சம்பந்தப்பட்ட முகவர் குறித்த தொகையை வைப்பிடுவார். அத்தோடு பணப் பரிவர்த்தனை முற்றுப் பெற்றுவிடும்.
குறித்த நாட்டில் உள்ள நிதி நிறுவனத்திற்கு முகவராகச் செயற்பட்டவர் வழங்கிய பணம் அந்த முகவருக்கு குறித்த நாட்டில் சொத்துக்களை வாங்கவோ ஏனைய வியாபார மற்றும் விடயங்களுக்கோ பயன்படும். இந்த அந்நிய நிதி இலங்கையின் வங்கியை அடையாது. இலங்கையின் டொலர் மற்றும் ஏனைய அந்நிய நிதிகளின் கையிருப்பை பாதிக்காது.
தற்போது வெளிநாடுகளில் உள்ள உண்டியல் முறையை மேற்கொள்ளும் நிதி நிறுவனங்களுக்கு மாற்றாக இலங்கையின் அரச வங்கி அவ்வாறானதொரு செயற்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள அந்த வங்கிக்கணக்கிற்கே பணம் அனுப்புபவர் பணத்தை வைப்பிட்டால் அதனை பணம் பெற்றுக்கொள்பவர்களுடைய கணக்கு இலக்கத்துக்கு அந்த வங்கி வைப்பிட முடியும். இல்லையேல் பணம் அனுப்புபவர்களுக்கும் பெற்றுக்கொள்பவர்களுக்கும் பெரிய தடைகளின்றி வங்கிக் கணக்கை ஏற்படுத்தி இந்தப் பரிவர்த்தனையைச் செய்ய முடியும்.  இதற்கான கட்டணம் இந்த உண்டியல் முகவர்களின் கட்டணத்திற்குப் போட்டியானதாகவும் அவர்களின் நாணய மாற்று வீதத்திற்குப் போட்டியானதாகவும் இருந்தால் இலங்கை ஒரு சில ஆண்டுகளிலேயே இன்னுமொரு 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டமுடியும் என்கிறார் த ஜெயபாலன்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *