சுமந்திரன் சேர்த்துக்கொள்ளத் தயாரில்லை! தனிக்கட்டைகள்: சிறீதரன் – கஜேந்திரகுமார் – செல்வம் ஏன் ஊசி அர்சுனாவோடு கூட்டமைக்கக் கூடாது?
“தமிழரசு கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டோம் என்பதற்காக வேண்டி அவர்கள் எடுக்கின்ற முடிவுக்கு மற்றவர்கள் ஒத்து வரவேண்டும் என்பது முறையற்ற செயல்” என எம் ஏ சுமந்திரன் நேற்று வெளியிட்ட கருத்துக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநான் பதிலளித்துள்ளார். “இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு மற்றைய கட்சிகள் செல்ல வேண்டும் என்பது சாத்தியமற்ற செயல்” எனவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார். எம் ஏ சுமந்திரன் தனிக்கட்டைகளான தங்களை: சிறீதரன், கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரை திட்டமிட்டு புதிய அரசியலமைப்புச் செயன்முறையிலிருந்து ஓரம் கட்ட முடிவெடுத்துவிட்டார் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இன்று காட்டசாட்டமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
“தென்னிலங்கையிலே இப்பொழுது இருக்கிற புதிய அரசாங்கமும், ஜனாதிபதியும் ஒரு பலமாக நாங்கள் ஒற்றுமையாகிவிட்டோம் என்று இதை பரிசீலிக்கின்ற நிலையை உருவாக்க முடியும்” என்று செல்வம் அடைக்கலநாதன் ஒரு ஆலோசனையும் சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் கேட்கின்ற நிலையில் எம் ஏ சுமந்திரன் இருப்பதாகத் தெரியவில்லை. ’தேர்வுச் செவிடனாக’ இதை எதுவுமே கேட்காதவராக எம் ஏ சுமந்திரன் செயல்படுவதும் தெரிகிறது.
இந்த தனிக்கட்டைகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணிக்கும், வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி வரைபுக்கும் எம் ஏ சுமந்திரன் ஆப்பு வைத்துவிட்டார் என்பதை நேற்றைய செய்தியில் தேசம்நெற் குறிப்பிட்டிருந்தது தெரிந்ததே.
இந்தத் தனிக்கட்டைகளின் ஒற்றுமையும் நேர்மையற்றது. தனிக்கட்டைகளானதால் வலிந்து ஒற்றுமைப்பட்டுள்ளனர். உணர்ந்து ஒற்றுமைப்படவில்லை. பொதுக் கட்டமைப்பில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளராக அரியநேந்திரன் நிறுத்தப்பட்ட போது பொன்னம்பலம் கஜேந்திரன் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கோரினார். தாங்களுடைய கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரித்தனர் என ரீல் விட்டார். எஸ் சிறீதரன் அரியநேந்திரனுக்காக கட்சியை விட்டுவிட்டு வரவில்லை. லண்டனுக்கு ஓடிப்போய் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் கோயிலில் ஒழிந்துகொண்டார். இப்ப வந்து நாங்கள் ஒற்றுமையாய் நிக்கவேணும் என்று ஒற்றைக் காலில் நின்றால், சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும் நம்பிடுமோ.
தனிக்கட்டைகளுக்கு இருப்பது ஒரே வழி தான். அது தமிழரசுக் கட்சியோடும் சுமந்திரனோடும் போற பஸ்ஸில ஏற வேண்டியது தான். சர்வதேச விசாரணை, வடக்கு – கிழக்கு இணைப்பம், தையிட்டியில புடுங்குவம் என்றால் இனிவரும் தேர்தல்கள் ரொம்ப கஸ்டமாகத்தான் இருக்கும். இல்லாட்டி ஊசி அர்ச்சுனா தலைமையில ஒரு முன்னணி ஒன்றை அமைச்சால் இன்னும் கொஞ்சத்தூரம் போகலாம். சிங்கம் சோசல்மீடியாவ வைச்சு உங்களை ஒரு லெவலுக்கு கொண்டு வரும்.