இந்திய பிரதமருடனான சந்திப்பில் மீனவர் பிரச்சினைக்கு முதன்மை இடம் வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!
இந்திய மீன்பிடி படகுகளினாலும் , தமிழக மீனவர்களின் அத்துமீறிய நுழைவினாலும் இலங்கையின் வடக்கு வாழ் மீனவர்கள் கடும் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இலங்கையின் கடல் பரப்பில் ரோலர் இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. தமிழகத்தில் இருந்து இலங்கைக்குள் நுழையும் கப்பல்கள் தனித்து மீன்பிடி என்பதற்கு அப்பால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வந்து கொட்டுவதையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில் அண்மையில் தேசம் திரை நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இடதுசாரி செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன் ” வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்தேசியம் பேசும் எந்த தலைமைகளுக்கும் அக்கறை இருந்தது இல்லை. இந்தியாவின் அரசியல் தலைமைகளை சந்திக்கும் போது கூட எந்த பயனுமற்ற விடயங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தமிழ்தேசியம் பேசும் தலைவர்கள் மீனவர் பிரச்சினைக்கு கொடுத்தது இல்லை. இதற்கான காரணம் தமிழ்தேசியம் என்பது இந்தியாவின் நலன்களுக்கானது என்பதே காரணம்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கடல்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சந்திரசேகர் மீனவர்களுடன் நேரடியான சந்திப்புக்களை நடாத்தியதுடன் இந்தியாவுடான பேச்சு வார்த்தைகளில் மீனவர்கள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் கட்டாய இடத்தை பிடிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு பயணமாகியுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் “இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார் .
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களிடம் பேசிய அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். கடல் வளம் காக்க சுருக்குமடி வலை பயன்படுத்துவதை மீனவர்கள் கைவிட வேண்டும். சுருக்குமடிவலை பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே சுருக்குமடிவலை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு அனுமதிக்காது எனவும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதி அளித்துள்ளார்.