70 வயது தாயின் பெயரில் கடையை குத்தகைக்கு எடுக்க வெளிநாட்டவர் விண்ணப்பம்! – சாவகச்சேரி மக்கள் கொந்தளித்தனர்!

70 வயது தாயின் பெயரில் கடையை குத்தகைக்கு எடுக்க வெளிநாட்டவர் விண்ணப்பம்! – சாவகச்சேரி மக்கள் கொந்தளித்தனர்!

சாவகச்சேரி நகரசபையால் உலக வங்கியின் நிதி அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கடைத் தொகுதிகளை குத்தகைக்கு விடுவது சம்பந்தமான கேள்வி அறிவித்தல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் நேற்று நகரசபை முன்றலில் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தகர் ஒருவர் வழங்கிய நேர்காணலில் ‘’சாவகச்சேரி நகரசபை தமக்கு வழங்கிய உறுதிமொழிக்கு மாறாக புதிய கடைத்தொகுதிகளை, குத்தகைக்கு வழங்குவதாக பகிரங்க ஏலத்தில் விட்டு தம்மை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். அதாவது, 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் அழிவடைந்த கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் நகரசபையால் கட்டப்படும் போது சாவகச்சேரி வர்தகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்ற வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக இதுவரை கடைகளை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பித்தவர்கள் தொடர்பிலும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது பெற்றோரின் பெயரில் கடைகளை குத்தகைக்கு எடுக்க விண்ணப்பித்துள்ளனர். சாதாரணமாக சாவகச்சேரி பிரதேசத்தில் வாழும் ஒருவர் வெளிநாட்டுக்காரருடன் போட்டியிட்டு அதிக விலையை கொடுத்து கடைகளை ஏலத்தில் எடுக்க முடியாது. உலக வங்கியின் நிதியுதவியில் கட்டப்பட்ட கடைகளை பொது ஏலத்தில் விட்டு பணம் படைத்த புலம்பெயர் தமிழர்கள் அதிக விலை கொடுத்து கடைகளை குத்தகைக்கு எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி நகரசபை ஏன் வியாபாரம் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சாவகச்சேரி வியாபாரிகள் குமுறுகிறார்கள்.

ஏற்கனவே புலம்பெயர் தமிழர்கள் வடக்கு கிழக்கில் உள்ள காணிகளை அதன் பெறுமதிக்கு மேலாக பணம் கொடுத்து வாங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உழைத்து வாழும் சாமானிய மக்கள் ஒரு பிடி நிலம் கூட வாங்க முடியாதளவிற்கு காணிகளின் விலைகள் உச்சத்தில் இருக்கின்றன. வடக்கில் ஒருபக்கம் போட்டிக்கு அதிக விலை கொடுத்து காணிகளை விலைக்கு வாங்கி கோடிகளை கொட்டி ஆடம்பர பங்களாக்களை கட்டும் புலம்பெயர் தமிழர்கள். அவ்வாறு கட்டிய வீடுகளை சுற்றுலா வரும்போது மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இப்படி பல வீடுகள் பூட்டிய நிலையில் பாழடைந்து காணப்படுகின்றன. அதேநேரம் இனத்தின் விடுதலைக்கு போராடியவர்கள் ஒரு தகரகொட்டகைக்கு வழியின்றி கஷ்டப்படுகிறார்கள்.

போராட்டக்காரர்கள் நகரசபையின் நுழைவாயிலை பூட்டி தமது எதிர்ப்பை காட்டியதோடு புதிய கடைத்தொகுதிகளுக்கான விண்ணப்பதாரிகள் சாவகச்சேரி நகராட்சி எல்லைக்குள் வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் வந்த பொலிஸார் பூட்டை உடைத்து கதவை திறந்ததோடு போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். அப்போது நகர சபை ஊழியர் ஒருவர் கழிவகற்றும் உழவு இயந்திரத்தை ஓட்டி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது மோதப் போவதாக பயமுறுத்தியதாகவும் ஊடகவியலாளர்களோடும் முரண்பட்டார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் கேள்விக் கோரலானது தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு உள்ளூராட்சி ஆணையாளரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் அரசாங்க பதவிகளை வகிப்பவர்களுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பாடல் மற்றும் உறவுகளில் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றது. அரச நிர்வாகத்தில் இடம்பெற்று வந்த அதிகார துஸ்பிரயோகம் மற்றும் இலஞ்சம் ஊழலால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்த மக்கள். இன்று வெகுண்டு எழுந்து போராடுவதை காணக்கூடியதாக உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *