பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பிரித்தானியர் சங்கர் விடுதலை!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜையான விஜயசுந்தரம் சங்கர் திங்கட்கிழமை 15ம் திகதி நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார். தன்னுடைய தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நவம்பர் 30 இலங்கை வந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் நிர்வாகிகளுடனும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள்உருவாக்கத்திற்காக பணம் சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 2012 இல் குற்றப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர், இவ்வாறானவர்களின் பட்டியலைத் தயாரித்து நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விஜயசுந்தரம் சங்கர் சார்பில், அண்மையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுக்காகப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா முன்னிலையாகி வாதிட்டார்.
“விஜயசுந்தரம் சங்கர் 2010 பிரித்தானியாவுக்குச் சென்று வாழ்கின்றார். 2012இல் அவர் பிரித்தானிய பிரஜையுமானார். அவர் பிரித்தானியா சென்ற பின் நாட்டுக்கு தன்னுடைய தாயாரின் இறுதிக் கிரியைகளுக்காக நாடு திரும்பியவர். 2009 ஆண்டுக்குப் பின் இவ்வாறு பல புலம்பெயர் தமிழர்கள் ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்படுகிறார்கள். இது சம்பந்தப்பட்டவர்களை மிகவும் பாதிக்கின்றது. நாட்டினது நற்பெயரையும் பாதிக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை வர அஞ்சுகின்றனர். இதனால் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்தவர்கள் நாட்டில் முதலீடு செய்வதையும் தடுக்கின்றது” போன்ற காரணங்களை முன் வைத்து கே வி தவராசா வாதிட்டார். அவர் பணத்தை அனுப்பியது உண்மைதான். அது அவருடைய தாய் தகப்பனுக்கு அதுவுமொரு குற்றமா எனவும் கேள்வி எழுப்பினார். இறுதியில் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி விஜயசுந்தரம் சங்கரை விடுதலை செய்தார்.