கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!
தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி சங்கரி ஐயா தான் கடிதம் எழுதுவதில் வல்லவர். அவருக்குப் போட்டியாக கஜேந்திர குமாரும் கடித எழுத ஆரம்பித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அனுரவுடன் எவ்வித ஆக்கபூர்வமான பேச்சுகளையும் இதுவரை முன்னெடுக்காத நிலையில், இந்தக் கடிதத்தை கஜேந்திரகுமார் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், இலங்கை ஒற்றையாட்சிக் கருத்தைக் கைவிட்டு தமிழ் மக்களை உள்ளடக்கிய பெடரல் அரசியலமைப்பை தயாரிக்க, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு மோடியை அவர் கோரியுள்ளார்..
கடந்த எழுபத்தைந்து வருடங்களில் இலங்கையின் கொள்கை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க தவறியமையே நாடு இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கு காரணம் என அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தை தன்னுடைய நலன் தவிர வேறு எதற்காகவும் இந்தியா கையிலெடுக்கப் போவது இல்லை. தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசின் மீது அது எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கப்போவதும் இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது ஆட்சியிலுள்ளவர்களுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமாக தொடர் பேச்சுக்களை முன்னெடுத்து புரிந்துணர்வின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஒன்று. பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தயாராகவுள்ள தலைவராக அனுரகுமார திசநாயக்க காணப்படுகின்றார். ஆனால் அதைச் சரிவர பயன்படுத்தாது வெறும் கண்துடைப்புக்காக இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.
தமிழர் விவகாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தம்முடைய அரசியல் இருப்புக்காகவே பயன்படுத்துகின்றனர் என்பது மீண்டும் இந்த சம்பவத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களுடைய அரசியல் சாயம் வெழுத்து வாக்கு வங்கி கவிழ்ந்து ஒரு ஆசனம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணியினர் தொடர்ந்தும் பூகோள அரசியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றினால் அடுத்த ஆசனமும் பறிபோகும் என்கின்றனர் அரசியல் அவதானிகள். இந்தியாவை வைத்து இலங்கைக்கு குட்டலாம் என்ற போர்மிலா காலாவதியாகிப் போனது காலாவாதியாகிப் போய்க்கொண்டிருக்கின்ற பொன்னம்பலம் சஜேந்திரகுமாருக்குப் புரியவில்லையா அல்லது அவருக்கும் அறளைபெயருகிறதா? என்கிறார் ஆய்வாளர் மாவடி ஏஆர் சிறிதரன்.