பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தல் விவகாரம் – சீ.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட கருணா !
கிழக்கு மாகாணத்தில் 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு கிழக்கு பல்கலைக்கழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. விரிவுரையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட நிலையில் சிலர் பதவிகளை துறந்து நாட்டை விட்டு வெளியேறினர்.
அக்காலப்பகுதியில் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியிலிருந்த கலாநிதி கே. பத்மநாதன் தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் புதிய துணை வேந்தராக பதவியேற்று கொண்ட பேராசிரியர் சி. ரவிந்திரநாத், பதவியேற்று சில வாரங்களின் பின்னரே மர்மமான முறையில் காணாமல் போனார்.
இவர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்து அவ்வேளை கருணா குழுவாக செயல்பட்டவர்களே பொறுப்பு என மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களினாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன அக் குழுவினரால் அவை அவ்வேளை நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) இன்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தல் விவகாரம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியில் வந்த கருணா ஊடகங்களிடம் பேசும் போது, ரவீந்திரநாத் கடத்தல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், மீண்டும் விசாரணைக்கு வரத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.