முல்லைத்தீவில் ஒதுங்கியவர்களை, விரும்பமின்ற திருப்பி அனுப்பக்கூடாது! தஞ்சம் வழங்கப்பட வேண்டும்”

முல்லைத்தீவில் ஒதுங்கியவர்களை, விரும்பமின்ற திருப்பி அனுப்பக்கூடாது! தஞ்சம் வழங்கப்பட வேண்டும்”

‘முல்லைத்தீவில் கரை ஒதுங்கியவர்களை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் அவர்களை அவர்களுடைய விரும்பமின்றி எங்கும் திருப்பி அனுப்பக்கூடாது’ என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரோஹிங்யா முஸ்லீம்கள், மியன்மாரில் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியிருந்தது. முல்லைத்தீவிற்கு வந்தவர்கள் ரோஹின்யா முஸ்லீம்கள் எனில் அவர்களுக்கு ஆளும் என்பிபி அரசு அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவிடயத்தில் அந்த மக்களுக்காகக் குரல்கொடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோருகின்றனர். வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் சமூகம் நீண்ட காலம் அகதி வாழ்க்கையை அனுபவித்தது. உலகின் பலநாடுகளிலும் இன்றும் அடைக்கலம் பெற்று வாழ்கிறார்கள், அந்த அடிப்படையில் இந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்புவது வடக்கு – கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை. ஒடுக்கப்பட்டவர்களின் சார்பில் குரல் கொடுக்கும் வெளிநாட்டுப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் போன்றவர்கள் இது விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். குறிப்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மனதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டமையை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்று வெளிநாட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று தத்தளித்திருக்கிறது. வழமை போல மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களே குறித்த படகை கண்டுள்ளனர். அப்படகில் 25 மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், இரண்டு கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்கள் உட்பட 103 பயணிகள் இருப்பதாக தெரியவந்தது. படகில் இருப்பவர்கள் மிகவும் சோர்வாகவும் பசியோடும் இருந்தனர். இவர்கள் மியான்மாரிலிருந்து வந்த சிறுபான்மையின மக்களான ரோஹிங்கியா முஸ்லீம்கள். ரோஹிங்கியா முஸ்லீம்கள் பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில் அங்குள்ள இராணுவ ஆட்சியாளர்களால் திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மியான்மாரின் இனப்படுகொலையிலிருந்து தப்பி 7 இலட்சங்களுக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம்கள் பங்களாதேசில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ஏற்கனவே வறுமையில் உழலும் பங்களாதேசத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி முகாம்களில் ரோஹிங்கா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பங்களாதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கயா அகதிகளில் பலர் அதிக சன நெரிசல் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் காரணமாக முகாம்களை வெளியேறுவதாகவும் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் முல்லைத்தீவு கடலில் ஒதுங்கிய மாதிரியே 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதியன்று கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படைக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பினர். டிசம்பர் 18ஆம் திகதியன்று அப்படகிலிருந்து 104 பேர் கொண்ட அகதிகள் குழுவை கடற்படையினர் மீட்டனர். அவர்கள் மியன்மார் பிரஜைகள் என கடற்படையினர் அடையாளப்படுத்தினர். இவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு யாழ்ப்பாண சிறையில் சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு மிரிஹான மற்றும் வெலிசர குடிவரவு தடுத்து வைத்தல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த ரோஹிங்கியா அகதிகளைப் போன்று வடக்கு – கிழக்கில் உள்ள தமிழர்கள் உலகின் பல பாகங்களுக்கும் ஆபத்தான படகுகளில் பயணித்துச் சென்றுள்ளனர். இன்னும் சிலர் கடலோடும் சங்கமமாகி உள்ளனர்.

நேற்றைய தினம் அகதிகளுடன் கடற்கலத்தை கண்டதும் மீனவர்கள் விரைந்து இத்தகவலை கடற்படை உட்பட அனைத்து சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்களுக்கும் அறிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வர முன்னரே மீனவ சங்கத்தினர் படகில் சோர்வுடன் பசியோடு இருப்பவர்களை உடனடியாக உண்ணக் கூடிய உணவு, தண்ணீர், உலர் உணவு என்பவற்றை விநியோகித்தனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்த முல்லைத்தீவு மக்கள் படகில் வந்தவர்களுக்கு ஓடோடிச் சென்று மனிதாபிமான உதவிகளை நல்கியதில் ஆச்சரியம் இல்லை.

கடற்படையினர் அகதிகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த எம்பி ரவிகரன் தெரிவித்தார். மேலும் அகதிகள் படகிற்கு வைத்தியர் அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும், அகதிகள் யாரும் கடும் சுகவீனமுற்று இருக்கவில்லை என்றும் கூறினார். படகில் உள்ளவர்களோடு உரையாடுவதற்கு மொழி தடையாகவுள்ளதால் மேலதிக தகவல்களை பெறுவதில் சிரமம் இருந்ததாகவும் தெரியவருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *