அரச அதிகாரிகளில் பணியாளர்களில் மக்கள் கோபம் கொள்கின்றனர்! போராடவும் தயாராகின்றனர்!
இலங்கையில் 14 லட்சம் ஊழியர்கள் அரச பணியில் உள்ளனர். இது இலங்கையின் சனத்தொகைக்கு தேவைக்கு அதிகமானது. இத்தொகை ஏழு லட்சமாக இருக்கவேண்டும் என்பதே மதிப்பீடு. நாட்டின் தற்போதைய நிதி நிலமையை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு வருகிற வருடம் வழங்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டிருந்த சம்பள உயர்வை என்பிபி அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இதனை ஒக்டோபர் 15 அமைச்சர் விஜித ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஒருபுறம் அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடத் தயாராக இருக்கின்றனர். மறுபுறம் வேலையற்ற பட்டதாரிகள் தம்மை அரசுப்பணியில் இணைக்கச் சொல்லி போராடுகின்றனர். “சும்மா இருந்து சம்பளம் எடுக்கலாம் பென்சன் எடுக்கலாம்” என்ற நினைப்பு என்கிறார் தனியார் வங்கியில் முகாமையாளராகச் செயற்படும் கதிர்காமராஜா வனோஜன்.
இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புக்கள் அரச துறையில் ஆளணிக்குறைப்பு செய்யும்படி இலங்கையை நிர்ப்பந்திக்கின்றன. பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் இலங்கை தற்சமயம் பணியிலுள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே அதன் வருமானத்தில் பெரும்பங்கு செலவிடப்படுகின்றது.
அப்படியிருந்தும் அரச ஊழியர்களின் அசமந்தம், வினைத்திறனற்ற மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் மலிந்தும் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதனால் நீண்ட காலமாகவே அரச ஊழியர்கள் மக்களை நடத்தும் விதம் தொடர்பில் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். குறிப்பாக சமீபத்தில் பருத்தித்துறையில் கற்கோவளம் என்ற கிராமத்தில் வெள்ள நிவாரணம் வழங்கிய போது அக் கிராமசேவகர் நடந்து கொண்ட விதம். அவர் தனது கணவரின் பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை எதிர்த்து கேள்வி கேட்ட பொதுமகனை கைது சிறையில் அடைத்தமை, அதனால் வீதிக்கு இறங்கி போராடிய சம்பவங்களை குறிப்பிடலாம்.
இதனையே தான் வடக்கு மாகாண ஆளுநர் டிசம்பர் 18 இல் கிளிநொச்சியில் செவிப்புல சவால் உடையோரின் சைகைமொழி உரிமை மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக நடந்த நிகழ்வொன்றில் இப்படி கூறுகிறார். ‘’ஏழைகளின் குரலை கிஞ்சித்தும் செவிமடுக்க தயாரில்லாத அரச ஊழியர்களால் சாதாரண சேவைகளை பெறவே மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்’’.
அரச சேவையில் தேவைக்கு அதிகமாக பணியாளர்கள் இருந்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதுடன் தகுந்த சேவையையும் வழங்காமல் தங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் வீணடிப்பதாக பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் அவர் கூறும் போது இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இங்கு நீங்கள் திரண்டிருப்பதன் மூலம் உங்கள் உரிமையை நிலைநாட்ட எவ்வளவு அக்கறையாக இருக்கின்றீர்கள் என்பதை உணர முடிவதாகக் குறிப்பிட்டார். உங்களின் குரல்கள் மாத்திரமல்ல ஏழைகளின் குரலும் அரச திணைக்களங்களில் உள்ளவர்களால் கேட்கப்படுவதில்லை என ஆளுநர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்கள் தம்மிடம் சேவை பெற வரும் மக்களை எவ்வாறு அலட்சிய மனப்பான்மையுடன் மட்டம் தட்டுகிறார்கள் என வேதனையோடு பிரதமர் ஹரிணி அமலசூரிய குறிப்பிடுகிறார். ‘’அரச ஊழியர்கள் சரியாக பேசுவதில்லை, குறைகளை செவி கொடுத்து கேட்பதில்லை மற்றும் கேள்வி கேட்டால் பதிலும் சொல்வதில்லை மக்கள் குறைப்படுகிறார்கள்’’ என்கிறார் பிரதமர் ஹரிணி.
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கூட எம்பி அர்ச்சுனா இராமநாதன் ஒதுக்கப்பட்ட நிதிகளை அரச ஊழியர்கள் எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பில் விமர்சனங்களையும் தெரிவித்து கேள்விகள் கேட்ட போது அரச ஊழியர்களுக்கு அது சினத்தை மூட்டியிருந்தது. அரச ஊழியர்கள் அர்ச்சுனா மீது காட்டிய உணர்வெழுச்சியான எதிர்வினையை மக்கள் ரசிக்கவில்லை. மாறாக அர்ச்சுனா அரச ஊழியர்களுக்கு தடியோட்டியதை ரசித்தனர். அரச ஊழியர்கள் தம்மை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற தோரணையில் நடந்து கொண்டதாகவே இந்த விடயத்தில் மக்கள் பார்வையுள்ளது. மக்களுக்கும் அரச ஊழியர்களுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகின்றது.
இக்குற்றச்சாட்டுக்கள் ஒட்டு மொத்த அரச ஊழியர்களை நோக்கியும் கூற முடியாது என்பதையும் மக்கள் விளங்கிக் கொண்டு தான் உள்ளனர். அரச ஊழியர்களின் எதேற்ச்சதிகார போக்கை கட்டுப்படுத்த அரச சேவைத்துறையில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க என்பிபியின் ஆட்சியில் தருணம் வந்துவிட்டது என மறுசீரமைப்பு வாதிகள் கருதுகின்றனர். மேலும் ஜனாதிபதி அனுரா “நீங்கள் நியாயமாக நடந்தால் நான் உங்களுடன் இருப்பேன்” என மிகத் தெளிவாகவே அரச ஊழியர்களுக்குச் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் அரச ஊழியர்களின் தபால் மூலமான வாக்குகளே இன்றைய அரசாங்கத்தின் வெற்றியை கட்டியம் கூறி உறுதிப்படுத்தியது. அரச ஊழியர்களும் மக்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.