எளிமையாக இருப்பது வைரலாகும் அளவுக்கு அரசியல்வாதிகளும் மக்களும் கெட்டுப்போனார்களா?
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதியானதிலிருந்து அவரது எளிமையும் ஆடம்பரமற்ற நடவடிக்கைகளும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு மக்களோடு மக்களாக கலந்து வாழ்வது, நடமாடுவது என பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடிய நபராக இருப்பது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.
இலங்கை அரசியலைப் பொறுத்தவரை பெரும்பாலும் பிரபுத்துவ, நிலவுடமையாளர்களும் மற்றும் மேல்தட்டு வர்கத்தினரும் அவர்களின் வாரிசுகளுமே மாறி, மாறி அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். இந்தப்போக்கை இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியாவிலும் பெரும்பாலான நாடுகளில் காணலாம்.
அநுரகுமார தான் முதல் தடவையாக தரைப் பாதையினூடாக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியாவர். சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பும் போது அவர் பயணித்த விமானத்தில் எக்கொனமிக்ஸ் வகுப்பில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்த பயணிகளுடன் நலம் விசாரித்து அளவளாவியது சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்து. இந்த சம்பத்தை நேரில் பார்த்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர்கள் அநுரகுமாரவின் நடத்தையை பாராட்டி சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர்.
நேற்றைய தினம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை பார்க்க சென்ற ஜனாதிபதி அநுர மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தாயாரை பார்வையிட்ட செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாயாரைப் பார்ப்பதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் ஆட்சித் தலைவர்கள் மேற்கு நாடுகளில் தமது அன்றாட வாழ்க்கையில் தமக்கான வேலைகளை அவர்களே செய்வது சர்வ சாதாரணம். குறிப்பாக தமது தனிப்பட்ட குடும்ப தேவைகளுக்காக பொருட்கள் வாங்க செல்லும் அவர்கள், மக்களோடு மக்களாக வரிசையில் காத்து நின்று பணம் செலுத்தும், தமது அலுவல்களை முடிப்பதும் பேசு பொருளாவது இல்லை. ஜேர்மனியின் முன்னாள் கன்சலரின் அங்கேலா மார்க்கல் பேர்லினில் பல்பொருள் அங்காடியில் தானே சென்று பொருட்கள் வாங்குவது தான் வழமை. அதேமாதிரி நெதர்லாந்து ஆட்சியாளர் தானே சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது வழமை. ஆட்சியாளர்கள் மக்களோடு மக்களாக வாழும் போது தான் அவர்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதையும் அறியக் கூடியதாக இருக்கும்.
இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும் பெரும்பாலும் அரச மருத்துவமனைகளை நாடுவது இல்லை. மாறாக இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளையே நாடும் போக்கு காணப்படுகிறது. நாட்டின் – மக்களின் தலைவர்களான பிரதிநிதிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசு மருத்துவமனைகளை நாடாத காரணத்தால் அரச மருத்துவமனைகள் இயங்கும் நிலை பற்றிய அடிப்படை அறிவு இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசியல் தலைவர்களுக்கும் தெரிந்ததில்லை. இது மருத்துவ மாபியாக்கள் இலகுவாக தம் இஷ்டத்துக்கு செயல்படவும் , மருத்துவர்களின் அசட்டையீனங்களுக்கும், மருத்துவசாலை அதிகாரிகளின் அடாவடிகளுக்கும் காரணமாக உள்ளது.
வடக்கில் இடம்பெறும் மருத்துவ மாஃபியாக்களை பற்றி தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருமே மறந்தும் வாய் திறந்தது கிடையாது. ஆர்வக்கோளாறு பாராளுமன்ற உறுப்பினர் ஊசி அர்ச்சுனா மருத்துவ மாபியாக்களை சாடி பாராளுமன்ற ஆசனம் ஒன்றை பெற்றிருந்தாலும் கூட ஆக்கப்பூர்வமான வகையில் மருத்துவமாபியாக்களை அவரால் அம்பலப்படுத்த முடியவில்லை. இதேவேளை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லக்கூடாது, நாட்டில் அதனால் தமிழர் உரிமைகளை பெறுவது சிக்கலாகும் என கூவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக பாராளுமன்ற அமர்வுகளுக்கு விடுப்பு எடுத்து அண்மையில் வெளிநாடு சென்றிருந்ததமையும் இங்கு கவனிக்கத்தக்கது. அவர் மட்டுமல்ல சமீபத்தில் திடீர் நோய் வாய்ப்பட்ட சிவாஜிலிங்கம் கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
எப்படியாயினும் ஜனாதிபதி அநுரகுமாரவின் எளிமையான நடவடிக்கைகள் ஒரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. ஜனாதிபதி தானாகவே கார் கதவை திறந்து கொண்டு இறங்குவது. மக்களை மிக நெருங்கி போய் உரையாடுதல் போன்ற செயற்பாடுகளின் போது ஜனாதிபதியினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிக்கலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.