கூகிளும் ஆட்குறைப்புச் செய்கின்றது! இலங்கை அரசும் ஆட்குறைப்புச் செய்ய வேண்டியுள்ளது!
கூகுளின் நிர்வாகப்பிரிவில் பணியாற்றும் 10 சதவீதம் ஊழியர்களை பணி விலக்கு செய்யப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுளின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி “நிர்வாகப் பிரிவில் ஆட்குறைப்பு செய்யப்படும் அதேநேரம் சிலரது பணிநிலை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படும். இதன் மூலம் கூகுளின் செயல்திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்கின்றது கூகுள்.
“கூகுளே உலகமயம்“ என்று சொல்லுமளவுக்கு எந்த விடயமாக இருந்தாலும் கூகுளில் பதில் கிடைத்துவிடும். இந்த நிறுவனத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்காண ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் பிறந்த தமிழரான சுந்தர் பிச்சை கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். கடந்த வருடம் 2023 இல் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையை பொறுத்தவரை கூகுகளை முன்மாதிரியாக கொண்டு அரச துறைகளில் தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்களை பணிநீக்க வேண்டும் எனபது சர்வதேச நாணய நிதியக் கடன் மீள்வரைவு உடன்பாட்டின் நிபந்தனைகளில் ஒன்று. குறிப்பாக 14 இலட்சம் அரச ஊழியர்களை 7 இலட்சமாக படிப்படியாக குறைப்பதன் மூலம் அரச இயந்திரத்தை வினைத்திறனாக செயற்பட வைக்கப்பட வேண்டும் என்பதே இலக்கு. அதுதவிர சிலரது பணிநிலைகளை வேறு பிரிவுகளுக்கு மாற்றலாம். இனிவரும் காலங்களில் இலங்கை டிஜிற்ரைலைசேனை நோக்கி நகரும்போது அரசதுறையில் பணிபுரியும் ஊழியர்களை அதற்கு தயார்படுத்தலாம்.
அவர்களினுடைய கல்வித்திறனை புதிய துறைகளில் உருவாகப்போகும் வேலைகளுக்கு மேம்படுத்தலாம் (upskill). தேவைக்கதிகமாக அரச துறைகளில் ஊழியர்களை பணிக்கமர்த்தி அவர்களுக்கு செய்வதற்கு கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் இல்லாமல் வைத்திருப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் விரையமாக்கப்படுவதை தவிர்க்கலாம். அதற்காக இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி 1500 அரச பணியாளர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அரச பணியாளர்கள் வேகமான மாற்றம் ஒன்றிற்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜனாதிபதியின் பல்வேறு தகவல்களிலும் இது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.